

கயத்தாறு,
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள ஓலைக்குளத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 55). தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரான இவர் ஆடு மேய்க்கும் தொழிலாளி ஆவார். அதே பகுதியைச் சேர்ந்தவர் சிவசங்கு (60). கடந்த சில நாட்களுக்கு முன்பு கயத்தாறு அருகே பால்ராஜ் ஆடுகளை மேய்த்து கொண்டு இருந்தார்.
அப்போது, அங்கு சிவசங்கு, அவரது மகன் சங்கிலிபாண்டி (19), உறவினர்களான கார்த்திக் (23), பெரியமாரி (47), வீரைய்யா (42), மகேந்திரன் (20), மகாராஜன் (24) ஆகியோரும் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து வந்தனர். அப்போது, ஆடு மேய்க்கும் தகராறில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சிவசங்கு தரப்பினர் பால்ராஜை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்து, மிரட்டி உள்ளனர். இதை ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவச்செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதுகுறித்து பால்ராஜ் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சிவசங்கு, சங்கிலிபாண்டி, கார்த்திக் உள்பட 7 பேரையும் நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேற்று ஓலைக்குளத்திற்கு வந்தார். பாதிக்கப்பட்ட பால்ராஜ் மற்றும் குடும்பத்தினரிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கயத்தாறு போலீஸ் நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தொழிலாளி பால்ராஜை காலில் விழ வைத்தும், மிரட்டியும் அதை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவவிட்டு உள்ளனர். இதுதொடர்பாக எனது உத்தரவின் பேரில் போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் விசாரணை நடத்தி 7 பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும். கிராம மக்கள் யாரும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. பஞ்சாயத்து தலைவர், துணை தலைவர் மற்றும் ஊர் மக்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.