

சென்னை,
நேற்று இரவு விதிகளை மீறி பைக் ரேஸில் ஈடுபட்டதாக இதுவரை 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் நேற்று நள்ளிரவு நுங்கம்பாக்கம், ஜெமினி, கோடம்பாக்கம், ஐஐடி மேம்பாலம் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பைக் ரேஸில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அதிக சத்தம் எழுப்பியபடி பைக் சாகசங்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, கல்லூரி மாணவர் குகன்(21) பைக் ரேஸில் ஈடுபட்டு, ஐஐடி மேம்பாலத்தில் இருந்து விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் விபத்துக்குள்ளான பைக்கை, பின்னால் வந்தவர்கள் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனால், விபத்து நடந்தபோது உடனிருந்தவர்கள் யார், பைக்கை ஓட்டி வந்தது யார் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள வீடியோக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் வள்ளுவர் கோட்டம் சிக்னல் அருகே மட்டும் 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றாக திரண்டு பைக் சாகசங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்தசூழலில் பைக் ரேஸுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் திடீரென நேற்று சாலை மறியலில் குதித்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த ரோந்து போலீசாரையும் முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நேற்று இரவு விதிகளை மீறி பைக் ரேஸில் ஈடுபட்டதாக இதுவரை 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இதுவரை 56 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், பைக் ரேஸில் சிறுவர்கள் ஈடுபட்டு இருந்தால் அவர்களின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுபோன்ற விதி மீறல்களை 100 (அ) 90031 30103 என்ற எண்ணுக்கு புகாராக தெரிவிக்கலாம் என்றும் சென்னை மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.