“பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேருக்கு” கமல்ஹாசன் வாழ்த்து

பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேருக்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
“பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேருக்கு” கமல்ஹாசன் வாழ்த்து
Published on

சென்னை,

சமூகம், பொருளாதாரம், கலை, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மத்திய அரசு தேர்ந்தெடுத்து பத்ம விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருதும் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு உள்ளது.

பத்ம விருதுகள் 112 பேருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 4 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 14 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 94 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டு உள்ளது.

விருது பெற்றவர்களில் 21 பேர் பெண்கள். 11 பேர் வெளிநாட்டில் வசிப்பவர்கள். திருநங்கை ஒருவருக்கும் விருது கிடைத்து இருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த 8 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு உள்ளது.

இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா இந்த ஆண்டு முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மறைந்த பாரதீய ஜனசங்க தலைவர் நானாஜி தேஷ்முக், மறைந்த பிரபல பாடகர் புபேன் ஹசாரியா ஆகியோருக்கு வழங்கப்பட்டு உள்ளது.

இவர்களில் நானாஜி தேஷ்முக், புபேன் ஹசாரியா ஆகியோருக்கு, மறைவுக்கு பின் இந்த விருது வழங்கப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தைச் சேர்ந்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்த பீட ஆன்மிக குரு பங்காரு அடிகளார், நடிகர் பிரபுதேவா, டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், பரதநாட்டிய கலைஞர் திருநங்கை நர்த்தகி நடராஜ், பிரபல சமூகசேவகி மதுரை சின்னப்பிள்ளை, பிரபல கண் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆர்.வி.ரமணி, டிரம்ஸ் இசைக்கலைஞர் சிவமணி, அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராமசாமி வெங்கடசாமி உள்ளிட்ட 94 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டு இருக்கிறது.

பிரபல பின்னணி பாடகர் சங்கர் மகாதேவனுக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டு உள்ளது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, பெண்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்ட மதுரை சின்னப்பிள்ளையை கவுரவிக்கும் வகையில் அவரது காலில் விழுந்து ஆசிபெற்றது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இந்நிலையில் பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேருக்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் இருந்து பத்மஸ்ரீ விருது பெற்ற மதுரை சின்னபுள்ள, டாக்டர்.R.V.ரமணி, டிரம்ஸ் சிவமணி, டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், டாக்டர். ராமசாமி வெங்கடசாமி மற்றும் பங்காரு அடிகளார் ஆகியோருக்கும் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். பத்மஸ்ரீ சகோதரி நர்த்தகி நடராஜுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com