தங்களுக்கு தாங்களே போதை ஊசி செலுத்திக்கொண்ட 7 பேர் கைது

அந்தியூர் அருகே தங்களுக்கு தாங்களே போதை ஊசி செலுத்திக்கொண்ட 7 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் டெல்லியில் இருந்து கூரியரில் போதை மாத்திரை வாங்கியது தெரியவந்துள்ளது.
தங்களுக்கு தாங்களே போதை ஊசி செலுத்திக்கொண்ட 7 பேர் கைது
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மலை கருப்புசாமி கோவில் பகுதியில் சிலர் போதையில் இருப்பதாக அந்தியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்ததும் அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அப்போது அங்கு 7 பேர் தங்களுக்கு தாங்களே போதை ஊசி செலுத்திக்கொண்டிருந்ததை போலீசார் கண்டனர். உடனே அவர்கள் அனைவரையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

கூரியர் மூலம்

பின்னர் பிடிபட்டவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் விசாரணையில் கிடைத்த அதிர்ச்சி தகவல்கள் வருமாறு:-

அந்தியூர் தவுட்டுப்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 23), யுவராஜ் (32), விக்னேஷ் (21), மற்றொரு யுவராஜ் (27), சிந்தகவுண்டம்பாளையத்தை சேர்ந்த பால்ராஜ் (28), அந்தியூரை சேர்ந்த சந்தோஷ்குமார் (28), கண்டன் (25) ஆகிய 7 பேர் டாக்டரின் அனுமதி சீட்டு இல்லாமல் டெல்லியில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து கூரியர் மூலம் 100 எண்ணிக்கைகள் கொண்ட போதை மாத்திரையை ரூ.14 ஆயிரத்துக்கு வாங்கி உள்ளனர்.

அதிர்ச்சி தகவல்

அதன் பின்னர் அந்த மாத்திரைகளை எடுத்துக்கொண்டு மலை கருப்புசாமி கோவில் பகுதிக்கு சென்று உள்ளனர். அங்கு போதை மாத்திரையை தண்ணீரில் கரைத்து ஊசியில் எடுத்து தங்களுக்கு தாங்களே உடலில் செலுத்தி கொண்டு உள்ளனர். மேலும் சிகரெட்டை வாங்கி போதை மாத்திரை கரைத்த தண்ணீரில் நனைத்து அதை புகைபிடித்து உள்ளனர். இதனால் போதையில் அவர்கள் எழுந்திருக்க முடியாமல் விழுந்து கிடந்து உள்ளனர்.

மேற்கண்ட அதிர்ச்சி தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது

இதைத்தொடர்ந்து அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். தங்களுக்கு தாங்களே போதை ஊசியை செலுத்திக்கொண்ட சம்பவம் அந்தியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com