லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கிய 7 போலீசார் பணியிடை நீக்கம்

லஞ்ச ஒழிப்பு சோதனையை தொடர்ந்து 7 பேரும் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டனர்.
லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கிய 7 போலீசார் பணியிடை நீக்கம்
Published on

தேனி,

தேனி மாவட்டம் போடிமெட்டு, குமுளி மலைப்பாதையில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடிகள், போடி முந்தலில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சோதனைச்சாவடி ஆகிய 3 இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 10-ந்தேதி அதிகாலையில் சோதனை செய்தனர். இந்த சோதனைகளின் போது 3 இடங்களில் இருந்து கணக்கில் வராத மொத்தம் ரூ.49,690-ஐ லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்.

இந்த சோதனையின் போது முந்தல் மதுவிலக்கு சோதனைச் சாவடியில் மதுவிலக்கு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கணேசன், ஏட்டு உமாநாத் ஆகியோர் பணியில் இருந்தனர். போடிமெட்டு சோதனைச் சாவடியில் ஏட்டுகள் ராஜேஸ் கண்ணன், பாலமுருகன் ஆகியோரும், குமுளி சோதனைச் சாவடியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன், ஏட்டுகள் பாஸ்கர், அருளானந்தம் ஆகியோரும் பணியில் இருந்தனர்.

லஞ்ச ஒழிப்பு சோதனையை தொடர்ந்து 3 இடங்களில் பணியாற்றிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 7 பேரும் தேனி ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டனர். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை அளித்தனர்.

இதையடுத்து துறை வாரியான நடவடிக்கையாக 2 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 7 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கே.எஸ்.பிரவீன் கவுதம் உத்தரவிட்டார். ஒரே நேரத்தில் 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com