மூதாட்டியிடம் 7½ பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு

மூதாட்டியிடம் 7½ பவுன் தாலிச்சங்கிலி பறிக்கப்பட்டது.
மூதாட்டியிடம் 7½ பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு
Published on

மணப்பாறை:

தாலிச்சங்கிலி பறிப்பு

மணப்பாறையை அடுத்த உசிலம்பட்டியை சேர்ந்தவர் பாப்பு(வயது 68). இவர் தினமும் காலையில் வீட்டில் பால் கறந்து கூட்டுறவு சங்கத்திற்கு எடுத்துச்செல்வது வழக்கம். இதேபோல் நேற்று பால் கறக்க சென்றபோது அங்குள்ள முட்புதரில் மறைந்திருந்த மர்ம நபர் திடீரென அங்கு வந்தார்.

அவர் மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாப்பு சத்தம் போட்டதால், அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். ஆனால் அந்த மர்ம நபர் தப்பிச் சென்றுவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

பணம் பறித்த 2 பேர் கைது

*திருச்சி மேலசிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் ஷகில் (வயது 32). இவர் திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் ஹெல்மெட் விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை சேர்ந்த பிரபாகரன்(21), அருண்குமார்(19) ஆகியோர் ஷகிலிடம் கத்திமுனையில் ஹெல்மெட் மற்றும் ரூ.2 ஆயிரத்தை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம், கத்தி போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

* உப்பிலியபுரம் ஒன்றியம் கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ்(54). இவருக்கு சொந்தமான போர்வெல் லாரியை, அவரது நண்பரான உத்தரபிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டம் மெரோனியைச் சேர்ந்த ரவிராஜா(26) என்பவரிடம், மாத குத்தகையாக வாய்வழி ஒப்பந்தத்தின் பேரில், கடந்த 2019-ம் ஆண்டு ஒப்படைத்துள்ளார். ஆனால் கடந்த ஒரு வருடமாக மாத குத்தகை பணம் வராததால், சுந்தர்ராஜ் நேரில் சென்று விசாரித்தபோது, அவரது உடைமைகள பறித்துக்கொண்டு, ரவிராஜா கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து போர்வெல் லாரியை மீட்டுத்தருமாறு சுந்தர்ராஜ் அளித்த புகாரின்பேரில், உப்பிலியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

கஞ்சா பறிமுதல்

*திருச்சி, எடமலைப்பட்டி புதூர், மில் காலனி, மாரியம்மன் கோவில் பின்புறம் பகுதியில் கஞ்சா விற்ற ராம்ஜி நகர், கள்ளிக்குடி பகுதியை சேர்ந்த கிரணை(24) எடமலைப்பட்டிபுதூர் போலீசார் கைது செய்து, ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

*திருச்சி கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் நேற்று காலை கோட்டை பகுதியில் உள்ள கீழ ஆண்டாள் வீதி தேர்முட்டி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்ற அதே பகுதியை சேர்ந்த உதயகுமார்(33) மற்றும் மேல தேவதானம் வீரமுத்து நகரை சேர்ந்த மாரிச்செல்வம்(25) ஆகியோரை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் சிறிய, சிறிய பொட்டலமாக கஞ்சா விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து போலீசார், 2 பேரையும் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com