

சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்டு 29 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய முடியாது என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிகாரப்பூர்வமற்ற முறையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்து விட்டதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில், கவர்னரின் நிலைப்பாடு அரசியல் சட்டத்துக்கு எதிரானதாகும்.
இதன் உண்மைத்தன்மை குறித்து கவர்னரும், முதல்-அமைச்சரும் தான் மக்களுக்கு விளக்க வேண்டும். 7 தமிழர்கள் விடுதலை குறித்த அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்பதற்கும், திருப்பி அனுப்பவும் கவர்னருக்கு அனைத்து அதிகாரங்களும் உண்டு. ஆனால், 7 தமிழர்களையும் விடுதலை செய்வதில் தமக்கு உடன்பாடு இல்லை என்று முதல்-அமைச்சரிடம் கவர்னர் அதிகாரப்பூர்வமற்ற முறையில் தெரிவித்து விட்டார் என்றால், தமது அந்த முடிவை அதிகாரப்பூர்வமான முறையிலும் தமிழக அரசுக்கு அறிவித்திருக்க வேண்டும். அது அரசியல் சட்டப்படியான அவரது கடமையாகும்.
7 தமிழர்கள் விடுதலை குறித்த கவர்னரின் முடிவு என்னவாக இருந்தாலும் அதை அதிகாரப்பூர்வமாக அரசுக்கு தெரிவிக்க வேண்டும். அமைச்சரவை தீர்மானத்தை ஏற்க மறுத்து கவர்னர் திருப்பி அனுப்பும் பட்சத்தில், அதே பரிந்துரையை கவர்னருக்கே தமிழக அமைச்சரவை மீண்டும் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.