

விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெற்றோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி நள்ளிரவில் திடீரென மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு – பவானி தம்பதியின் மகள் ஹேமாவதி (வயது 7). இவர் அப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி இரவு சிறுமி ஹேமாவதிக்கு குடும்பத்தினர் கேக் வெட்டி மகிழ்ச்சியாக பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர்.
பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்ததும், சிறுமி தனது பெற்றோருடன் வீட்டில் உறங்கச் சென்றுள்ளார். மறுநாள் (திங்கட்கிழமை) அதிகாலை பெற்றோர் எழுந்து பார்த்தபோது, அருகில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமி ஹேமாவதியைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடியும் சிறுமி கிடைக்காததால், சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட எஸ்பி மதிவாணன் மற்றும் செஞ்சி டிஎஸ்பி ரமேஷ்ராஜ் ஆகியோர் விசாரணையைத் துரிதப்படுத்தினர். சிறுமியை மீட்க 2 டிஎஸ்பிக்கள் தலைமையில் 4 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்ட போலீசாரைக் கொண்டு 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 3 பேரைத் தனிப்படை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
4-வது நாளாகத் தேடுதல் வேட்டை தீவிரமடைந்துள்ளது. விழுப்புரத்திலிருந்து வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் மற்றும் ட்ரோன் கேமராக்கள் மூலம் ஆலம்பூண்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களான திக்காமேடு, ரெட்டிபாளையம், நடுப்பட்டு பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள், கிணறுகள், குட்டைகள் மற்றும் மலைப்பகுதிகளில் போலீசார் சல்லடை போட்டுத் தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும், மொபைல் போன் டவர் தரவுகளையும் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.