

விழுப்புரம்,
செஞ்சி அருகே மாயமான 7 வயது சிறுமியை தேட 100 போலீசார் களமிறங்கியுள்ளனர். மலைக்குன்றுகளில் டிரோன்கள் மூலம் கண்காணிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி குளக்கரை தெருவில் வசித்து வருபவர் வடிவேலு. இவருடைய மனைவி பவானி. இந்த தம்பதியினரின் 2-வது மகள் ஹேமா வதி(வயது 7). இவள் கடந்த 11-ந் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடிவிட்டு அன்று இரவு வீட்டில் பெற்றோரு டன் படுத்து தூங்கியுள்ளாள்.
மறுநாள் அதிகாலை 5 மணியளவில் பெற்றோர் எழுந்து பார்த்தபோது ஹேமாவதியை காணவில்லை. அவளை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சிறுமியை கண்டுபிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார், பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருவது டன், சிறுமியை கண்டுபிடிக்க பல இடங்களில் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 3 நாட்களாக தேடியும் சிறுமி கிடைக்காத நிலையில் தொடர்ந்து இன்று 5-வது நாளாக தேடுதல் பணி நடந்து வருகிறது. இப்பணியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் நேரில் சென்று அவர்களது விவரங் களை சேகரித்து, வீட்டில் உள்ள அனைத்து பகுதிகளையும் முழுமையாக ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் சிறுமியின் வீட்டை சுற்றியுள்ள விவசாய விளைநிலங்கள், முட்புதர்கள், ஏரி, குளங்கள், குட்டைகள், விவசாய கிணறுகள் மற்றும் மலைக்குன்றுகளில் உள்ள குகைகள், பாறை களின் இடுக்குகளிலும் சிறுமி இருக்கிறாளா? என்பது குறித்து 50 டிரோன்கள் மூலம் தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.