செஞ்சி அருகே 7 வயது சிறுமி 10 நாட்களாக மாயம் - சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றம்!

10 நாட்களாகத் தீவிரமாகத் தேடியும் சிறுமி கிடைக்காத நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
செஞ்சி அருகே 7 வயது சிறுமி 10 நாட்களாக மாயம் - சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றம்!
Published on: 

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

பிறந்தநாள் கொண்டாடிய சிறுமி மாயம்

செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த வடிவேலு - பவானி தம்பதியின் 2-வது மகள் ஹேமாவதி (7). இவர் கடந்த 11-ம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு இரவு பெற்றோருடன் வீட்டில் தூங்கியுள்ளார்.

மறுநாள் அதிகாலை 5 மணியளவில் பெற்றோர் எழுந்து பார்த்தபோது சிறுமியைக் காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், சத்தியமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

8 தனிப்படைகள் அமைத்து தேடுதல்

சிறுமியைக் கண்டுபிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 10-வது நாளாகத் தொடரும் தேடுதல் பணியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

கிராமத்தில் உள்ள வீடுகளுக்குச் சென்று விவரங்களைச் சேகரிப்பதுடன், வீடுகளின் அனைத்துப் பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

டிரோன்கள் மூலம் தீவிர கண்காணிப்பு

சென்னை ஓய்வுபெற்ற தடய அறிவியல் துறை நிபுணர் சண்முகம் தலைமையிலான குழுவினர், சிறுமியின் வீடு மற்றும் தோட்டப் பகுதிகளில் தடயவியல் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும், விவசாய நிலங்கள், முட்புதர்கள், ஏரி, குளங்கள், குட்டைகள், விவசாயக் கிணறுகள் மற்றும் மலைக்குன்றுகளில் உள்ள குகைகள், பாறை இடுக்குகள் உள்ளிட்ட பகுதிகளில் சிறுமியைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக 50 டிரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தீயணைப்புத் துறையினரும் ஆலம்பூண்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள கிணறுகளில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். மரக்காணத்தில் இருந்து மீன்பிடிக்கப் பயன்படுத்தப்படும் சுருக்குமடி வலைகளும் கொண்டுவரப்பட்டு, ஆழமான கிணறுகளில் தேடுதல் நடத்தப்பட்டது.

சிபிசிஐடிக்கு மாற்றம்

10 நாட்களாகத் தீவிரமாகத் தேடியும் சிறுமி கிடைக்காத நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, சிறுமியைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணை அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com