

விழுப்புரம்,
செஞ்சி அருகே மாயமான 7 வயது சிறுமியை ஆலம்பூண்டி மலை மீது மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி குளக்கரை தெருவில் வசித்து வருபவர் வடிவேலு. இவருடைய மனைவி பவானி. இந்த தம்பதியினரின் 2-வது மகள் ஹேமாவதி(வயது 7). இவள் கடந்த 11-ந் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடிவிட்டு அன்று இரவு வீட்டில் பெற்றோருடன் படுத்து தூங்கியுள்ளாள். மறுநாள் அதிகாலை 5 மணியளவில் பெற்றோர் எழுந்து பார்த்தபோது ஹேமாவதியை காணவில்லை. அவளை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சிறுமியை கண்டுபிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட் டுள்ளது. இந்த தனிப்படை போலீசார், பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதுடன், சிறுமியை கண்டுபிடிக்க பல இடங்களில் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 6 நாட்களாக தேடியும் சிறுமி கிடைக்காத நிலையில் தொடர்ந்து இன்று 7-வது நாளாக தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் நேரில் சென்று அவர்களது விவரங் களை சேகரித்து, வீட்டில் உள்ள அனைத்து பகுதிகளையும் முழுமையாக ஆய்வு செய்து வருகின்றனர். சென்னை ஓய்வுபெற்ற தடய அறிவியல் துறை நிபுணர் சண்முகம் தலைமையி லான குழுவினர். சிறுமியின் வீடு மற்றும் தோட்டப்பகுதிகளில் தீவிரமாக தடயவியல் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சிறுமியின் வீட்டை சுற்றியுள்ள விவசாய விளைநிலங்கள். முட்புதர்கள், ஏரி குளங்கள், குட்டைகள், விவசாய கிணறுகள் மற்றும் மலைக்குன்றுகளில் உள்ள குகைகள், பாறைகளின் இடுக்குகளிலும் சிறுமி இருக்கிறாளா? என்பது குறித்து 50 டிரோன்கள் மூலம் தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆலம்பூண்டி மலைமீது 20 போலீசார் மோப்பநாய் உதவியுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதுபோல் தீயணைப்புத் துறையினர், ஆலம்பூண்டி மட்டுமின்றி சுற்றுப்புற கிராமங்களில் உள்ள கிணறுகளில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர மரக்காணத்தில் இருந்து மீன்பிடிக்க பயன்படுத்தப்படும் சுருக்குமடி வலைகளும் கொண்டு வரப்பட்டு அதிக ஆழமுள்ள பெரிய கிணறுகளில் வலை வீசி தேடும் பணியும் நடைபெற்று வருகிறது.