

சென்னை,
தமிழகத்தில் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. இதை செயல்படுத்த, அனைத்து மாவட்டங்களிலும் போதைப்பொருள் தடுப்பு சிறப்புப் படை உருவாக்கப்பட்டுள்ளது. அந்த சிறப்பு படைபோலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை மாதவரம் அருகே நடத்தப்பட்ட வாகனச் சோதனையில் ரூ.140 கோடி மதிப்பிலான சுமார் 70 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெளி மாநிலத்தில் இருந்து ஹெராயின் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறை (DRI) அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் அடிப்படையில் மாதவரம் ரவுண்டானா பகுதியில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை (DRI) அதிகாரிகள் வாகனச் சோதனை நடத்தினர். அப்போது ஒரு வாகனத்தை (கார்) மறித்து சோதனை செய்தனர். அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 70 கிலோ ஹெராயின் போதைப்பொருள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுது அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து போதை பொருளை கடத்தி வந்த இருவரை கைது செய்தனர்.
கடத்திவரப்பட்ட ஹெராயின் போதை பொருள் தரத்தின் அடிப்படையில் ஒரு கிலோ 2 கோடி முதல் 7 கோடி வரையில் இருக்கும் என தகவல் உள்ள நிலையில் கடத்தி வரப்பட்ட 70 கிலோ போதை பொருள் 150 முதல் 300 கோடி ரூபாய் வரை இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை அதிகாரிகள் கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விலை உயர்ந்த இந்த போதைப் பொருளை எந்த மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு கடத்தி வந்தனர் என்ற கோணத்திலும் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.