அருப்புக்கோட்டையில் பட்டப்பகலில் தி.மு.க. பிரமுகர் வீட்டில் 70 பவுன் நகை; ரூ.1½ லட்சம் கொள்ளை

அருப்புக்கோட்டையில் நேற்று பட்டப்பகலில் தி.மு.க. பிரமுகர் வீட்டில் 70 பவுன் நகை மற்றும் ரூ.1½லட்சம் கொள்ளை போனது.
அருப்புக்கோட்டையில் பட்டப்பகலில் தி.மு.க. பிரமுகர் வீட்டில் 70 பவுன் நகை; ரூ.1½ லட்சம் கொள்ளை
Published on

அருப்புக்கோட்டை,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அன்பு நகர் முதல் தெருவை சேர்ந்தவர் நாகநாதன் (வயது 46). திருச்சுழி ரோட்டில் மோட்டார் நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும் தி.மு.க.வில் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளராகவும் இருந்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று அருப்புக்கோட்டையில் நடைபெற்ற விசேஷ நிகழ்ச்சிக்காக சென்றார். இந்தநிலையில் அவரது மூத்த மகளான கல்லூரி மாணவி சுகி (20) நேற்று மதியம் 1 மணிக்கு வெளியே சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்தார்.

அப்போது வீட்டின் முன்பு மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தார். இதையடுத்து சந்தேகம் அடைந்த அவர், எட்டிப்பார்த்த போது, வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சுகி, உடனே நாகநாதனுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். அந்த நேரத்தில் வீட்டின் உள்ளே இருந்து மர்ம நபர் ஒருவர் இரும்பு ஆயுதத்துடன் வெளியே வந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் நின்று கொண்டு இருந்த நபருடன் அவர் தப்பிச் சென்றுவிட்டார்.

இதுகுறித்து அருப்புக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜபுஷ்பா ஆகியோர் நாகநாதனிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது வீட்டிற்குள் இருந்த 70 பவுன் நகை மற்றும் பணம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது ஹெல்மெட் அணிந்த இருவர் இருசக்கர வாகனத்தில் வந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com