

சென்னை,
மின்சார வாரியத்தில் 700 உதவி பொறியாளர்களுக்கு. உதவி செயற்பொறியாளர் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.
முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு பதவி ஏற்றவுடன், மின்சாரத்துறை வரலாற்றில் முதல்முறையாக ஒரேநேரத்தில் 300 பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது கடந்த 2012-ம் ஆண்டு உதவி பொறியாளர்களாக பணியில் சேர்ந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி 700 உதவி பொறியாளர்களுக்கு. உதவி செயற்பொறியாளர் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. அதற்கான கோப்பில் துறை அமைச்சர் நிர்மல் குமார் கையெழுத்திட உள்ளார்.
அதற்கு பிறகு பதவி உயர்வு பெற்றவர்களுக்கு காலியாக உள்ள உதவி செயற்பொறியாளர் பணியிடங்கள் ஒதுக்கப்படும். அவரவர் விரும்பும் இடங்களில் பணிகளை ஒதுக்கவும் மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பதவி உயர்வு உத்தரவுகளை முதல்-அமைச்சர் விஜய் கையால் வழங்குவதற்கான விழாவை நடத்தி அதன் மூலம் வழங்கலாமா? என்றும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல், மின்சார வாரியத்தில் பணியாற்றி வரும் 200 உதவி செயற்பொறியாளர்களுக்கு. ஊர் மாறுதல் உத்தரவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதியில் இருந்து 20-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் கேட்ட இடத்திற்கு விருப்பு ஊர் மாறுதல் அளிக்கப்பட்டு உள்ளது. இது ஏற்கனவே இருந்த வாரிய விதிகளின் படி வழங்கப்பட்டு உள்ளது. வெளிப்படைத்தன்மையுடன் கவுன்சிலிங் முறையில் வழங்கப்பட்ட இந்த பணியிட மாற்றம் கோருபவர்களிடம் 3 இடங்களை தேர்வு செய்து விண்ணப்பிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது. அதில் காலியாக இருக்கும் இடத்திற்கு பணி மாறுதல்கள் வழங்கப்பட்டு உள்ளன.
வெளிப்படைத்தன்மையுடன், எந்தவித சிபாரிசுகளும், பரிசு பொருட்கள் எவையும் பெறாமல் நேர்மையுடன் பணியிட மாற்றம் வழங்கப்பட்டு உள்ளது. பொதுமக்களுக்கு தரமான சேவை கிடைப்பதற்காக இந்த பணியிட மாற்றம் அளிக்கப்படுகிறது என்று வாரிய அதிகாரிகள் கூறினர்.