

வேலூர்,
கர்நாடக மாநிலத்தில் இருந்து லாரிகளில் டன் கணக்கில் ரேஷன் அரிசி வேலூர் வழியாக சென்னைக்கு கடத்தப்படுவதாக உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி. சந்தோஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் போலீசார் காட்பாடியை அடுத்த பொன்னை-திருவலம் 4 வழிச்சாலையில் மேல்பாடி மேம்பாலம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த 2 வாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் லாரிகளில் நூற்றுக்கணக்கான மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது. இதையடுத்து போலீசார் 2 லாரி டிரைவர்களிடமும் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில், அவர்கள் ராணிப்பேட்டை தாங்கல் தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 49), ராணிப்பேட்டை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த தங்கமணி (48) என்பதும், கர்நாடக மாநிலம் கோலார் பங்காருபேட்டையில் உள்ள அரிசி ஆலைகளில் இருந்து ஏற்றி விடப்பட்ட மூட்டைகளை சென்னை துறைமுகத்துக்கு கொண்டு சென்றதாகவும், அவற்றில் ரேஷன் அரிசி இருப்பது தெரியாது என்று கூறினர்.
இதையடுத்து 2 லாரிகளில் 1,420 மூட்டைகளில் இருந்த 71 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து, திருவலம் நுகர்பொருள் வாணிபக்கிடங்கு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து ராமச்சந்திரன், தங்கமணி ஆகியோரை கைது செய்தனர்.