

சென்னை,
72 வது தேசிய திரைப்பட விருது பெற்ற தேர்வானவர்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ் சினிமாவின் மூலம் தேசிய விருதுக்கு தேர்வானவர்கள் தேசிய அளவில் தமிழ் சினிமாவிற்கும், தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் பேரும் புகழும் சேர்த்திருப்பது சிறப்புக்குரியது. இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட திரைப்படத்தில் உள்ள பல துறைகளுக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.
கலைஞர்களின் கடின உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் தேசிய விருதுகள் அறிவிக்கப்படுவது மகிழ்ச்சிக்குரியது. 2024-ம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் (72nd National Film Awards) அறிவிக்கப்பட்டுள்ளது.
புஷ்பா 2 திரைப்படம் இரண்டு முக்கிய பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றுள்ளது. சிறந்த தமிழ் படமாக தனுஷ் இயக்கி நடித்த 'ராயன்' திரைப்படமும், 'அமரன்' படத்திற்காக ஜி.வி. பிரகாஷ்குமார் சிறந்த பின்னணி இசைக்கான விருதுக்கும் தேர்வாகியிருக்கிறது.
‘மகாராஜா’ படத்திற்காக சிறந்த துணை நடிகை பிரிவில் சச்சனா நமிதாஸுக்கும், சிறந்த சண்டைப் பயிற்சியாளருக்கான பிரிவில் அனல் அரசுக்கும் என 2 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் திரையுலகிற்கு மொத்தம் 10 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது போற்றுதலுக்குரியது.
3 தேசிய விருதுகளுக்கு தேர்வான இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கும், கேப்டன் மில்லர் பட நடிகர் தனுஷுக்கும், சிறந்த ஒலிக்கலவை பொறியாளரான சுரேன் ஜிக்கும், அமரன் பட படத்தொகுப்பாளர் கலைவாணனுக்கும், சிறந்த ஒலிக்கலவைக்கான விருது ப்ளூ படத்திற்காக ஹரிஹர சுதனுக்கும் உட்பட தமிழ் சினிமாவில் தேசிய விருதுக்குத் தேர்வான அனைவரும் பெருமைமிக்கவர்கள்.
காரணம், கலைத்துறையில் மிகுந்த ஈடுபாட்டோடு செயல்பட்டு, தொடர் முயற்சி செய்து, கடின உழைப்பை மேற்கொண்டு, அர்ப்பணிப்போடு பணியாற்றியதுதான்.
தேசிய அளவில் தமிழ் மொழி உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பணியாற்றி தேசிய விருதுக்கு தேர்வானவர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள், வாழ்த்துக்குரியவர்கள்.
குறிப்பாக தமிழ் சினிமாவின் மூலம் தேசிய விருது பெறும் அனைவரையும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பாராட்டி, தொடர்ந்து கலைத்துறையில் சிறந்து விளங்கி பல்வேறு உயரிய விருதுகள் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.