ஒரே நாளில் 737 மி.மீ. பதிவு; திருச்சி மாவட்டத்தில் வெளுத்துக்கட்டிய மழை

நேற்று பெய்த மழையில் அதிகபட்சமாக திருச்சி பொன்மலை பகுதியில் 63 மில்லி மீட்டர், திருச்சி ஜங்ஷன் பகுதியில் 61 மில்லி மீட்டர் மழை பதிவானது
ஒரே நாளில் 737 மி.மீ. பதிவு;
திருச்சி மாவட்டத்தில் வெளுத்துக்கட்டிய மழை
Published on

திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பத்தின் தாக்கம் கடுமையாக காணப்பட்டது. நேற்று வழக்கத்துக்கு மாறாக மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து இரவு கனமழை கொட்டியது. திருச்சி மாநகரில் இரவு 8.30 மணிக்கு தொடங்கிய மழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. இதேபோன்று புறநகர் பகுதிகளிலும் பரவலாக நல்ல மழை பெய்தது.நேற்று பெய்த மழையில் அதிகபட்சமாக திருச்சி பொன்மலை பகுதியில் 63 மில்லி மீட்டர், திருச்சி ஜங்ஷன் பகுதியில் 61 மில்லி மீட்டர் மழை பதிவானது. மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 737.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் சராசரி அளவு 30.73 ஆகும்.

மாவட்டத்தின் இதர பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

கள்ளக்குடி 26.2, லால்குடி 15.6, நந்தியாறு அணைக்கட்டு 24.4, புள்ளம்பாடி 28.4, தேவிமங்கலம் 26.2, சமயபுரம் 23.4, சிறுகுடி 30.12, வாத்தலை அணைக்கட்டு 44.6, மணப்பாறை 23.6, பொன்னையார் அணை 55, கோவில்பட்டி 58.4, மருங்காபுரி 5.2, முசிறி 16, புலிவலம் 3, தாப்பேட்டை 3, நவலூர் கொட்டப்பட்டு 36.2, துவாக்குடி 56.1, கொப்பம்பட்டி 5, துறையூர் 32, திருச்சி ஏர்போர்ட் 55.1, திருச்சி டவுன் 46.நேற்று கொட்டிய மழையால் திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது. கருமண்டபம் ஆர்.எம்.எஸ். காலனி பகுதியில் சில வீடுகளுக்குள் கழிவுநீருடன் வெள்ளம் புகுந்தது. நேற்று பெய்த பலத்த மழையால் மாநகரில் பல இடங்களில் சாலைகளில் மண் அரிப்பு ஏற்பட்டு குண்டும் குழியுமாக மாறியுள்ளது. மேலும் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com