

சென்னை,
பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நீட் தேர்வு பற்றி பல புகார்களை முன்வைத்து பேசி இருக்கிறோம். அறிவுசார்ந்த படிப்பை படிக்கும்போது எந்த சட்டமும் தடையாக இருக்கக்கூடாது என்பது தான் முதல்-அமைச்சரின் விருப்பம். சட்டசபையில் இதுதொடர்பான தீர்மானம் நிறைவேற்றும் போது கூட எனது தனிப்பட்ட தீர்மானம் அல்ல. நாம் அனைவரும் சேர்ந்து நிறைவேற்றும் தீர்மானம் என்று கூறினார்.
நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு நீட் தேவையில்லை என்று தெரிவித்து இருக்கிறது. அவர்களின் கருத்துகள் துறை ரீதியாக என்னென்ன முதல்-அமைச்சரின் கவனத்துக்கு சென்று இருக்கிறதோ? அதனை பின்பற்றுவோம்.
தமிழ் வழிக்கல்வியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீடு குறித்து கோரிக்கைகள் வரும்பட்சத்தில் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு கிடைக்கும் அளவுக்கு முதல்-அமைச்சரிடம் எடுத்துச்சொல்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.