

சென்னை,
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த மசோதாவிற்கு கடந்த 45 நாட்களாக ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை.
இந்தசூழலில் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு சட்ட மசோதாவை நடப்பு ஆண்டிலேயே நிறைவேற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று தெரிவித்திருந்தது. மேலும் சட்ட மசோதா இந்த வருடம் நிறைவேறாவிட்டால் நீட் தேர்வு எழுதிய 8 மாணவர்கள் மட்டுமே சேர வாய்ப்பு உள்ளது என்றும், நடப்பு ஆண்டிலேயே சட்ட மசோதாவை நிறைவேற்றி 400 மாணவர்கள் இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை அடிப்படையாகக் கொண்டு, மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவுக்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. மருத்துவக் கலந்தாய்வு தொடங்கப்பட வேண்டிய நிலையில் தமிழக அரசு இந்த அரசாணை வெளியிட்டுள்ளது.