

சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் 75 வயது மூதாட்டி தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில் உள்ள பாகனேரி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகத்தின் மனைவி பொம்மி ( வயது 75). இவர்களுக்கு 6 மகன்கள் உள்ள நிலையில், மூதாட்டி ( பொம்மி ) தனியாக வசித்து வந்தார். இவர் இரவு நேரங்களில் அப்பகுதியில் உள்ள கடைகளின் வாசலில் தூங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு பாகனேரி பேருந்து நிலையம் எதிரே உள்ள கடை வாசலில் மூதாட்டி தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மூதாட்டியின் தலையில் கல்லை போட்டு விட்டு தப்பி சென்றனர். இதில் பலத்த காயமடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.