குடியரசு தின விழா; சென்னையில் 7,500 போலீசார் பாதுகாப்பு

சென்னை பெருநகரம் முழுவதும் அந்தந்த காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாகனங்கள் மூலம் ரோந்து பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
குடியரசு தின விழா; சென்னையில் 7,500 போலீசார் பாதுகாப்பு
Published on

சென்னை:

குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழக கவர்னர் ஆர்.என். ரவி மெரினா-காமராஜர் சாலைவாலாஜா சாலை சந்திப்பில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். இதனையொட்டி, காமராஜர் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தர்வின் பேரில், கூடுதல் ஆணையாளர்கள் இணை ஆணையாளர்களின் நேரடி மேற்பார்வையில், துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 7,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

சென்னை விமான நிலையம், ரயில் நிலையங்கள், பஸ் முனையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள் மற்றும் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு கூடுதலாக, சென்னை பெருநகரம் முழுவதும் அந்தந்த காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாகனங்கள் மூலம் ரோந்து பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாதவரம், திருவொற்றியூர், மதுரவாயல், மீனம்பாக்கம், துரைப்பாக்கம், நீலாங்கரை உள்ளிட்ட இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து காவல்துறையினர் வாகனத் தணிக்கையும் மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் அதிகமாக கூடும் இடங்களான மீனம்பாக்கம் விமான நிலையம், சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்கள், கோயம்பேடு, மாதவரம் பேருந்து முனையங்கள் உட்பட அனைத்து முக்கிய இடங்களிலும், சென்னை பாதுகாப்பு பிரிவின் காவல் அதிகாரர்கள் வெடிகுண்டு கண்டுபிடித்தல் மற்றும் செயலிழத்தல் பிரிவு, மோப்பநாய் பிரிவு மற்றும் மெரினா கடற்கரை பகுதியில் கடலோர பாதுகாப்பு படை பிரிவினருடன் இணைந்து நாசவேலை தடுப்பு சோதனைகளும் மேற்கொண்டுள்ளனர்.

மேலும், குடியரசு தினத்தை முன்னிட்டு நாளையும், மறு நாளும் மெரினா கடற்கரை யில் அமைந்துள்ள உழைப்பாளர் சிலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், ராஜ்பவன் முதல் மெரினா கடற்கரை வரை மற்றும் தமிழக முதல்-அமைச்சரின் இல்லத்தில் இருந்து மெரினா கடற்கரை வரை செல்லும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் ட்ரோன் கேமராக்கள் பறப்பது தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி பொருட்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com