76-வது குடியரசு தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றி வைத்தார்

குடியரசு தினவிழா மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் நடைபெற்றது.
சென்னை,
நாட்டின் 76-வது குடியரசு தினவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். அந்தந்த மாநிலங்களில் கவர்னர்கள் தேசிய கொடியை ஏற்ற உள்ளனர்.
தமிழக அரசு சார்பில் மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் கவர்னர் ஆர்.என்.ரவி 4வது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அந்த நேரத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. தொடர்ந்து கவர்னர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், முப்படையை சேர்ந்த அதிகாரிகள், அரசு மற்றும் போலீஸ்துறை உயர் அதிகாரிகள் மற்றும் மக்கள் என பலரும் தேசியக்கொடிக்கு 'சல்யூட்' செய்தபடி நின்றனர். குடியரசு நாள் விழா மேடையில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஸ்ரீராம், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர்.
அதனை தொடர்ந்து வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். காந்தியடிகள் காவலர் பதக்கங்களை மொத்தம் 5 பேருக்கு வழங்கப்பட்டது. வீரதீரச் செயலுக்கான 'அண்ணா பதக்கம்' தீயணைப்பு வீரர் வெற்றிவேலுக்கு வழங்கப்பட்டது. அதனையடுத்து போலீஸ் அதிகாரிகளின் அணிவகுப்பு நடைபெற்றது. பின்னர் அரசு அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது. சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கலை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றன. 'தமிழே வாழ்க... தாயே வாழ்க...' என்ற பாடலுக்கு பள்ளி, கல்லூரி மாணவிகள் நடனம் ஆடினர். கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர். மெரினாவில் குடியரசு தினவிழா நடைபெற்ற பகுதி போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் 'டிரோன்கள்' பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தின விழாவையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். மக்கள் அதிகம் கூடும் வழிப்பாட்டு தலங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களில் தனியார் பாதுகாவலர்கள் பங்களிப்போடு போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
பஸ்-ரெயில் நிலையங்களில் போலீசார் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் உடைமைகளை ரெயில்வே பாதுகாப்பு படையினரும், ரெயில்வே போலீசாரும் இணைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகத்துக்குரிய நபர்களை விசாரணைக்குட்படுத்தி அனுப்பி வைக்கிறார்கள்.