திருமணத்துக்கு 8 கிராம் தங்கம்.. அனைத்து பஸ்களிலும் மகளிருக்கு இலவசம்.. விஜய் அளித்த வாக்குறுதிகள் - முழு விவரம்

தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அரசின் சார்பில் தங்க மோதிரம் வழங்கப்படுமென விஜய் அறிவித்துள்ளார்.
திருமணத்துக்கு 8 கிராம் தங்கம்.. அனைத்து பஸ்களிலும் மகளிருக்கு இலவசம்.. விஜய் அளித்த வாக்குறுதிகள் - முழு விவரம்
Published on

சென்னை,

தவெக மகளிர் தின விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டு பேசியதாவது;

சிங்கப்பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள். மகளிர் தினமான இன்று உங்களுக்கான முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்கப் போகிறேன்.

1. பெண்கள், குழந்தைகள், முதியோர் பாதுகாப்புக்கு தனி இலாகா

பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோருக்கென தனி இலாக்கா உருவாக்கப்படும். அந்த இலாக்கா எனது நேரடிக் கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் இருக்கும். சமரசமற்ற பெண்கள் பாதுகாப்பை நோக்கிப் பயணிக்கும் நம் கனவு நனவாவது உறுதி என்பதை நமது தேர்தலின் முதல் வாக்குறுதியாகச் சொல்வதில் பெருமை கொள்கிறோம்.

2. மதிப்புமிகு மகளிர் திட்டம்

60 வயது வரை உள்ள அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் 2500 ரூபாய் வழங்கப்படும் என்பதைப் பெருமகிழ்வுடன் அறிவிக்கிறோம். இதில் மாநில மற்றும் ஒன்றிய அரசு ஊழியர்களாக இருப்பவர்களின் குடும்பங்களுக்கு மட்டும் விதிவிலக்கு. இப்படிச் செய்வதால் கூடுதலான குடும்பங்கள் பயனடையும் வாய்ப்பு அதிகரிக்கும் என்பதை நம் தாய்மார்கள் அனைவரும் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வர் என்பது நமக்குத் தெரியும்.

3. அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம்

இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு ஆறு கேஸ் சிலிண்டர்கள் கட்டணமின்றி வழங்கப்படும். நம்மைச் சீராட்டி வளர்த்த நம் தாய்மார்கள் வயிற்றில் பால் வார்க்கும் திட்டமாக இதை அறிவிப்பதில் தமிழக வெற்றிக் கழகம் தலைநிமிர்ந்து பெருமைகொள்கிறது.

4.அண்ணன் சீர் திட்டம்

நம் தங்கைகளின் திருமணத்திற்காக எட்டு கிராம் (ஒரு பவுன்) தங்கமும், தரமான பட்டுச் சேலையும் தாய் வீட்டிலிருந்து அண்ணன் சீராக அளிக்கப்படும். இப்படியான அந்த மகிழ்வில் பங்கேற்பதில் தமிழக வெற்றிக் கழகமும் நாமும் பெரும் மகிழ்ச்சி அடைவதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

5. காமராஜர் கல்வி உறுதித் திட்டம்

ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை எந்தக் குழந்தையும் கல்வி இடைநிற்றலே இல்லாமல் செல்வதற்காக ஒவ்வொரு தாய்க்கும் அல்லது பாதுகாவலருக்கும் ஆண்டுதோறும் 15,000 ரூபாய் பொருளாதார உதவித் தொகையாக வழங்கப்படும்.

6. வெற்றிப் பயணம் திட்டம்

அரசுப் போக்குவரத்தின் அனைத்துப் பேருந்துகளிலும் பெண்கள் பயணிக்கும் வகையில் உத்தரவிடப்படும். இதன் மூலம் தமிழகத்தின் எந்த மூலையிலிருந்தும் எந்த இடத்திற்கும் அனைத்துப் பெண்களும் கட்டணமின்றிப் பயணிக்கலாம். மேலும், பேருந்துக்காகக் காத்துக் கிடக்க வேண்டிய அவசியமும் ஏற்படாது.

7. ஜீரோ டாலரன்ஸ் கிரைம்ஸ் (Zero Tolerance Crimes)

பெண்களுக்கு எதிரான குற்றமே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். அதன் அடிப்படையில்தான் 'Zero Tolerance for Crimes Against Women' என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பது நம் மிகப்பெரிய கனவு, நம்முடைய விருப்பம்.

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 'ராணி வேலுநாச்சியார் படை' ஏற்படுத்தப்படும். சாதாரண உடையில் இருக்கிற இந்தப் படையைச் சேர்ந்த பெண்கள் 'பாடி கேம்' (Body Cam) உடன் ஆங்காங்கே பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள். இந்தத் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 500 குழுக்கள் அமைக்கப்பட்டுப் பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

8. அஞ்சலை அம்மாள் அதிவிரைவு பெண்கள் நீதிமன்றங்கள்

பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரித்து விரைவாக நீதி வழங்க 'அஞ்சலை அம்மாள் அதிவிரைவு பெண்கள் நீதிமன்றங்கள்' அமைக்கப்படும். இந்த 'பாஸ்ட் ட்ராக்' (Fast Track) நீதிமன்றங்களில் பெண்களுக்கு எதிரான வழக்குகள் எதுவும் இனி நிலுவையில் இல்லாத நிலை ஏற்படும். விசாரணை முறையாக நடத்தப்பட்டுத் தீர்ப்பும் விரைவாக வழங்கப்படும்.

9. 'ஜீரோ டார்க் ஸ்பாட்ஸ்' (Zero Dark Spots)

24/7 இயங்கும் மத்திய கட்டளை மையத்துடன் (Centralized Command Center) இணைக்கப்பட்ட அவசர காலப் பொத்தான்கள் (Panic Buttons), தனியார் ஷேர் ஆட்டோக்கள் உட்பட அனைத்துப் பொதுப் போக்குவரத்து வாகனங்களிலும் பொருத்தப்படும். இந்தப் பொத்தான்கள் வழியாக ஐந்து நிமிடத்தில் பதிலும் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும். சிசிடிவி கேமராக்களும் விளக்குகளும் வெளிச்சமும் இல்லாத இடங்களே இல்லை என்ற வகையில் 'ஜீரோ டார்க் ஸ்பாட்ஸ்' (Zero Dark Spots) உருவாக்கப்படும்.

பெண்கள் பாதுகாப்பை 24/7 கண்காணிப்பு செய்ய முடியுமா என்ற கேள்விக்கான பதிலாக, அதிநவீன கட்டளை மையங்கள் (State of the Art Command Centers) அமைத்து, சிசிடிவி நெட்வொர்க்குகளைக் கண்காணிக்கவும், அவசர நிலைகளை அந்த நேரத்திலேயே கவனிக்கவும், அதற்கான விரைவான பதிலை உறுதி செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

10. விலையில்லா சானிட்டரி பேட்ஸ்

பெண்களுக்கு மிகவும் தேவையான நாட்களில், பொது விநியோகம் நடக்கும் இடங்களான ரேஷன் கடைகள் மற்றும் பள்ளிகள், கல்லூரிகள் மூலம் அனைத்துப் பெண்களுக்கும் விலையில்லா சானிட்டரி பேட்ஸ் (Sanitary Pads) வழங்குவது உறுதி செய்யப்படும்.

11. சிங்கப் பெண்கள் மேம்பாட்டுத் திட்டம்

நிலுவையில் உள்ள கடன்களைத் திருப்பிச் செலுத்துவதன் மூலமும், பெண்கள் நடத்தும் சுய உதவிக்குழுக்களுக்கு ஐந்து லட்சம் வரை வட்டியில்லா நிதியை வழங்குவதன் மூலமும் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தித் திறன் மேம்படுத்தப்படும். சுய உதவிக்குழுக்களிலிருந்து பதிவு செய்யப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களாக (MSMEs) மாறுபவர்களுக்கு ஆண்டுதோறும் 5 லட்சம் வழங்கப்படும்; அதாவது 100% மானியமாகவே வழங்கப்படும்.

12. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்

தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளை வரவேற்கும் திட்டம்தான் 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்'. தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அரசாங்கத்தின் ஆசீர்வாதமாக ஒரு தங்க மோதிரம் வழங்கப்படும். கூடவே ஒரு 'பேபி வெல்கம் கிட்' (Baby Welcome Kit) வழங்கப்படும். ஊட்டச்சத்துப் பொருட்கள், பேபி டிரஸ்ஸஸ், தரமான பேபி சோப்ஸ், பேபி ஆயில், பேபி பவுடர், பேபி கொசுவலைகள், பொம்மைகள், நாப்கின்ஸ் மற்றும் டயப்பர்கள் இவை எல்லாம் அந்த பேபி வெல்கம் கிட்டில் இருக்கும்.

இதெல்லாம் வெறும் சாம்பிள் தான். வரப்போகும் நாட்களில் இன்னும் பல அறிவிப்புகள் வரும்.

இதெல்லாம் ஓகே.. ஆனால் ஸ்டாலின் சார் செய்ய முடியாததை நீ எப்படி செய்வாய் என்று கேள்வி வரும். நம் மாநிலத்துக்கான மொத்த பட்ஜெட் ரூ.4.39 லட்சம் கோடி. அதில் 30 சதவீதம் ஸ்டாலின் சார் வரிக்கு போகிறது. அரசிடம் காசில்லை என்பது பொய். அரசின் பற்றாக்குறைக்கு ஊழலே காரணம். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.”

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com