பாளையங்கோட்டை சிறையில் இருந்து 8 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை

பாளையங்கோட்டை சிறையில் இருந்து பொதுமன்னிப்பில் 8 ஆயுள் தண்டனைகைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று சிறைத்துறை டி.ஐ.ஜி.பழனி கூறினார்.
பாளையங்கோட்டை சிறையில் இருந்து 8 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை
Published on

நெல்லை:

தமிழக சிறைத்துறை டி.ஐ.ஜி.பழனி இன்று பாளையங்கோட்டை சிறைக்கு வந்து ஆய்வு செய்தார். அப்போது அவர் சிறை அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் மற்றும் கோப்புகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து சிறைகைதிகளிடம் அங்குள்ள வசதிகள், உணவின் தரம் உள்ளிட்டவைகளை கேட்டறிந்தார்.

இதை தொடர்ந்து பாளையங்கோட்டையில் சிறை கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்குக்கு சென்று அங்கு 5 கிலோ கிராஸ் சிலிண்டர் விற்பனையை தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் சிறைத்துறை மூலமாக 5 பெட்ரோல் பங்க் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பாளையங்கோட்டை சிறையின் சார்பில் நன்னடத்தை கைதிகளை கொண்டு இயக்கப்பட்டு வரும் பெட்ரோல் பங்கில் இதுவரை ரூ.146 கோடிக்கு பெட்ரோல், டீசல் விற்பனையாகியுள்ளது.

இதன் மூலம் ரூ.5 கோடி வருவாய் கிடைத்துள்ளது. மதுரையில் புதிய சிறைச்சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். சிறைச்சாலைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்களின் பயன்பாடுகள் தடுக்கப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சிறைச்சாலைக்குள் சாதி ரீதியான மோதல்களை தவிப்பதற்காக தனித்தனி அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய சிறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.இதைப்போல் மாவட்ட சிறைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆயுள் தண்டனை கைதிகளின் நன்னடத்தை செயல்பாடுகள் குறித்ததன் பேரில் அரசு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு பலர் விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பாளையங்கோட்டை சிறையில் மொத்தம் 456 ஆயுள் தண்டனை கைதிகள் உள்ளனர். இதில் 63 பேர் நன்னடத்தை மூலம் விடுதலை செய்யப்படுவதற்கு தகுதியானவர்கள்.

இவர்களை பற்றிய விவரம் அரசு அனுப்பப்பட்டுள்ளது. முதல் கட்டமாக அரசின் அனுமதிப்படி பாளையங்கோட்டை சிறையிலிருந்து 8 ஆயுள் தண்டனை கைதிகள் பொதுமன்னிப்பு மூலம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து அரசு அறிவிக்கும்பட்சத்தில் படிப்படியாக மீதமுள்ளவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது ஜெயில் சூப்பிரண்டு சங்கர்,உதவி ஜெயிலர் பெருமாள் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com