

சென்னை,
தேனி தேக்கம்பட்டி சிறையில் இருந்து தப்பியதில் மேலும் 8 கைதிகள் பிடிபட்டனர். இதன்படி தப்பிய 17 கைதிகளில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டியில் தேனி மாவட்ட சிறை அமைந்துள்ளது. இங்கு விசாரணை கைதிகள் அடைக்கப்படுகின்றனர். 24 மணி நேரமும் சிறைக்காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு இந்த சிறையில் கைதிகள் சிலர் குழுவாக சேர்ந்து சிறைக்காவலர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.
அவ்வாறு தாக்கிவிட்டு 17 கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறைக்காவலர்கள் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கே.எஸ். பிரவீன் கவுதம் உத்தரவின்பேரில், தேக்கம்பட்டியில் போலீசார் குவிக்கப்பட்டனர். தப்பி ஓடிய கைதிகளை பிடிக்க மாவட்டம் முழுவதும் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. மாவட்ட சிறை அமைந்துள்ள பகுதியில் இருந்து சுமார் 10 கி.மீ. சுற்றளவை சுற்றிவளைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த சூழலில் பிரவீன்குமார், சிலம்பரசன், ராஜா சிக்கந்தர், ராஜ்குமார், மற்றும் லிங்கபிரசாத் ஆகிய 5 கைதிகள் பிடிக்கப்பட்டனர். மீதமுள்ள 12 கைதிகளைக் கைது செய்வதற்காகத் காவல்துறை தீவிரத் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில் சிறையில் இருந்து தப்பிய மேலும் 8 கைதிகள் சிக்கி உள்ளனர். சிறையின் பின்புறம் இருந்த மலைப்பகுதிகள் பதுங்கி இருந்த மேலும் 8 பேரை, டிரோன்கள் மூலம் சுற்றி வளைத்து போலீசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தப்பி சென்ற 17 பேரில் இதுவரை மொத்தம் 13 பேர் பிடிபட்டுள்ளநிலையில், எஞ்சியுள்ள 4 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறையில் விசாரணையை முடித்துவிட்டு புறப்பட்ட சிறைத்துறை டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “காவல்துறை, சிறைத்துறையினர் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு, இதுவரை 13 பேரைப் பிடித்துள்ளனர். மீதமுள்ளவர்கள் விரைவில் பிடிபடுவார்கள். கைதிகள் பிடிபடுவது குறித்து அவ்வப்போது தகவல்கள் தெரிவிக்கப்படும்” என்று கூறினார்.
இதனிடையே பணியில் கவனக்குறைவாக இருந்ததற்காக தேனி மாவட்டச் சிறைச்சாலையை சேர்ந்த 9 சிறைப் பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.