கோவையில் போதை ஊசி பயன்படுத்தியதாக 8 பேர் கைது


கோவையில் போதை ஊசி பயன்படுத்தியதாக 8 பேர் கைது
x

பொள்ளாச்சியில் ஒரு கும்பல் போதை ஊசி போட்டுக்கொள்வதாக போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மீன்கரை ரோடு ரெயில்வே மேம்பாலத்தின் அருகில் கும்பல் போதை ஊசி போட்டுக்கொள்வதாக நகர மேற்கு போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் போதை ஊசி போட்டுக் கொண்டிருந்தவர்கள் தப்பி ஓடினார்கள். சிலர் சாக்கடை கால்வாயில் குதித்தனர்.

இதற்கிடையில் போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்து, போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள அம்மாபட்டியை சேர்ந்த இமாம் அலி(வயது 39), பொள்ளாச்சி நேரு நகர் ஷேக் பரீத்(23), மார்க்கெட் ரோடு சலீம்(23), ரெயில் நிலைய ரோடு நந்தகுமார்(22), குமரன் நகர் பாவா இப்ராகிம்(35), முஸ்தபா(25), முகமது அலி(37), மீன்கரை ரோடு ரத்தினகுமார்(39) ஆகிய 8 பேர் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 8 பேரையும் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து போதை ஊசிகள், மருந்துகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் பல்லடத்தை சேர்ந்த முரளி என்பவர் போதைப்பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதற்கிடையில் போலீசார் தேடுவதை அறிந்த முரளி தலைமறைவானார். மேலும் தனிப்படை போலீசார் முரளியை வலைவீசி தேடி வருகின்றனர். அவரை பிடித்தால் போதைப்பொருட்கள் எங்கிருந்து கிடைக்கிறது, வேறு யாருக்காவது இதில் தொடர்பு உள்ளதா? என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

1 More update

Next Story