வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மாமியார்-மருமகளிடம் 8½ பவுன் நகை பறிப்பு

நகைகளை பறிக்க முயன்றவர்களை தடுக்கச் சென்ற வாலிபர் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு காயமடைந்தார்.
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மாமியார்-மருமகளிடம் 8½ பவுன் நகை பறிப்பு
Published on

தஞ்சாவூர்,

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த முதல்சேரி காலனியில் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் 8½ பவுன் தங்க நகைகளை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகைகளை பறிக்க முயன்றவர்களை தடுக்கச் சென்ற குடும்பத்தலைவர் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு காயமடைந்தார்.

முதல்சேரி காலனி ஆற்றங்கரையைச் சேர்ந்த மைக்கேல் நவீன் (30) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை அவர் வீட்டின் ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அவரது தாயார் தவசிமேரி மற்றும் மனைவி இவாஞ்சலின் ஆகியோர் வீட்டின் மற்றொரு பகுதியில் கதவை திறந்து வைத்து தூங்கியிருந்தனர்.

அப்போது வீட்டிற்குள் புகுந்த 2 மர்மநபர்கள், இவாஞ்சலின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியையும், தவசிமேரியின் கழுத்தில் இருந்த 2½ பவுன் சங்கிலியையும் பறித்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றனர்.

பெண்களின் அலறல் சத்தம் கேட்டு விழித்த மைக்கேல் நவீன், மர்மநபர்களை விரட்டிச் சென்றார். அப்போது அவர்களில் ஒருவர் கையில் வைத்திருந்த இரும்புக் கம்பியால் மைக்கேல் நவீனின் தலையில் தாக்கிவிட்டு, இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.

இதில் படுகாயமடைந்த மைக்கேல் நவீனை அக்கம் பக்கத்தினர் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com