ஆம்பூரில் 8 வயது சிறுமி மாயம் - ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீசார்

கடைக்குச் சென்ற சிறுமி நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
AI Image
AI Image
Published on: 

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் ரெட்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி கடைக்குச் சென்று வருவதாகக் கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து உடனடியாக சிறுமியின் குடும்பத்தினர் ஆம்பூர் டவுன் போலீசில் புகார் செய்தனர்.

அதன் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அக்ஷய் அனில் வாகரே உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் தீவிர தேடுதல் வேட்டை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

அதில் சிறுமி ஆம்பூர் டவுன் போலீஸ் நிலைய எல்லையில் இருந்து வெளியேறி, ஆலங்காயம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பேருந்தில் இருந்து கீழே இறங்கி தனியாக நடந்து செல்வது கண்டறியப்பட்டது. உடனடியாக போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

இந்த நிலையில் புகார் பெறப்பட்ட ஒரு மணி நேரத்துக்குள் காணாமல் போன 8 வயது சிறுமியை போலீசார் கண்டுபிடித்து மீட்டனர். பின்னர் சிறுமி பாதுகாப்பாக குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டாள்.

X