கிருஷ்ணகிரியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு

அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிறுமியை அருகில் உள்ள புதர் மற்றும் வனப்பகுதிக்குத் தூக்கிச் சென்று கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்தனர்.
மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை
கோப்புப்படம்
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய 8 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபர்களைப் பிடிக்கக் போலீசார் சார்பில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பாலியல் வன்கொடுமை

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த மலை கிராமத்தைச் சேர்ந்த 4-ஆம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமி, கடந்த புதன்கிழமை மாலையில் பள்ளி வகுப்பு முடிந்து மற்ற குழந்தைகளுடன் நடந்து வீடு திரும்பினார். மற்ற குழந்தைகள் முன்னதாகவே தங்கள் வீடுகளுக்குச் சென்றுவிட, அந்தச் சிறுமி மட்டும் தனியாக வந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அச்சிறுமியை அருகில் உள்ள புதர் மற்றும் வனப்பகுதிக்குத் தூக்கிச் சென்று கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

வீடு திரும்பிய சிறுமி நடந்த கொடூரத்தை அழுதுகொண்டே தன் பெற்றோரிடம் தெரிவித்தார். இதனையடுத்து உறவினர்கள் குழந்தைகளுக்கான உதவி எண் 1098-க்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக அன்று இரவில் 108 அவசர ஊர்தி மூலம் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிறுமி கொண்டு செல்லப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வியாழக்கிழமை காலையில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிறுமிக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

3 தனிப்படை அமைப்பு

இச்சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போக்சோ சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சேலம் சரக டி.ஐ.ஜி சந்தோஷ் ஹதிமானி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜி.எஸ். அனிதா மற்றும் மாவட்ட ஆட்சியர் சி. தினேஷ் குமார் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை விரைந்து கைது செய்து சிறையில் அடைக்க, 3 தனிப்படை போலீஸ் அதிகாரிகள் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com