

சென்னை,
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் கல்பனா. அவர் கணவரை பிரிந்து 8 வயது மகளுடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு கல்பனா தனது பெற்றோர் மற்றும் மகளுடன் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கருமாங்கழனி பகுதிக்கு குடியேறினார்.
அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கல்பனா பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் 4 நாட்களுக்கு முன்பு துர்கா பூஜை நடைபெற்று கொண்டிருப்பதாக ஜார்கண்ட் மாநிலத்திற்கு சென்றார். அப்போது, சிறுமி காஞ்சிபுரத்தில் தனது தாத்தா, பாட்டியுடன் இருந்து வந்தார். இந்த நிலையில் சிறுமி 3 நாட்களுக்கு முன்பு நெடுஞ்சாலைக்கு தனியாக சென்றார். அப்போது அங்கிருந்து திடீரென மாயமானார். சிறுமியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
பின்னர், இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர். நடைபெற்று வந்த விசாரணையில், சுங்குவார்சத்திரம் அருகே உள்ள ஆரனேரி பேருந்து நிறுத்தத்தில் சிறுமி பேருந்தில் ஏறி பூந்தமல்லி நோக்கி சென்றது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், இரண்டு தனிப்படைகள் அமைத்து ஒரு குழுவை ஜார்க்கண்ட் மாநிலத்திற்கும், மற்றொரு குழுவை தமிழகம் முழுவதும் தேடுதல் பணிக்கும் அனுப்பினர். இதற்கிடையே, சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் சிறுமி ஆதரவின்றி சுற்றித் திரிவதாகப் பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில், ரெயில்வே போலீசார் சிறுமியை மீட்டு சென்னையில் உள்ள தனியார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், சிறுமியிடம் விசாரித்தபோது, தனது தாயை சந்திப்பதற்காக ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு செல்ல சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் காத்திருந்ததாக தெரிவித்தார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும், ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சென்னை தனியார் காப்பகத்திற்கு சென்று சிறுமியின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு குறித்து விசாரித்து, அவரது நிலைமையை கேட்டறிந்தனர். தாயை காண வேண்டும் என்ற ஏக்கத்தில் தனியாக பயணம் செய்த 8 வயது சிறுமி, இரண்டு நாட்களுக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.