80 வயது மூதாட்டி பாலியல் பலாத்கார வழக்கு: தேசிய மகளிர் ஆணையம் விசாரணை

மகளிர் ஆணையம் இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
80 வயது மூதாட்டி பாலியல் பலாத்கார வழக்கு: தேசிய மகளிர் ஆணையம் விசாரணை
Published on

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 80 வயது மூதாட்டி நேற்று முன்தினம் அங்குள்ள சாலையில் தனியாக நடைப்பயிற்சி சென்றார். அப்போது சாலை ஓரத்தில் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்த 2-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் திடீரென மூதாட்டியை வலுக் கட்டாயமாக அங்குள்ள சவுக்கு தோப்புக்குள் இழுத்து சென்றனர்.

பின்னர் அவர் அணிந்திருந்த ஆடைகளை கிழித்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததோடு அவர் காது, மூக்கில் அணிந்திருந்த 1 பவுன் நகைகளை அறுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். பின்னர் உடல் நிலை பாதிக்கப்பட்டு கிடந்த மூதாட்டியை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டாகள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பண்ருட்டி, எஸ்.கே.பாளையம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்பையா என்பவரின் மகனும் ரவுடியுமான சுந்தரவேல்(வயது 25) என்பவருக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் அவரை பிடிப்பதற்காக தேடினர். அப்போது காடாம்புலியூர் அருகே மேல்மாம்பட்டில் உள்ள பழைய சாராய தொழிற்சாலையின் பின்புறம் முந்திரித்தோப்பு அருகில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று சுந்தரவேலுவை பிடிக்க முயன்றனர். அப்போது அவர் திடீரென மறைத்து வைத்திருந்த வீச்சரிவாளால் போலீசாரை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.

இதில் போலீஸ்காரர் குபேந்திரன் படுகாயம் அடைந்தார். உடனே சுதாரித்துக்கொண்ட பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுமணி துப்பாக்கியால் சுந்தரவேலுவை நோக்கி சுட்டார். இதில் காலில் குண்டு பாய்ந்து விழுந்த அவரையும், வெட்டுக்காயம் அடைந்த போலீஸ்காரர் குபேந்திரனையும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், வழக்கை விரைந்து விசாரித்து 3 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com