

சென்னை,
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கட்டுப்பாட்டில், திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியில் வடசென்னை அனல் மின்நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு வட சென்னை-3 திட்டத்தின் கீழ் 800 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அலகு அமைந்துள்ளது.
சுமார் ரூ.10,158 கோடியில் அமைக்கப்பட்ட இந்த திட்டம் கடந்த ஜனவரி மாதம் 24-ந்தேதி வணிக ரீதியிலான மின் உற்பத்தியை தொடங்கியது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின் தேவையை பூர்த்தி செய்வதில் இந்த மின் நிலையத்தின் பங்களிப்பு முக்கியமானதாக உள்ளது.
இந்த நிலையில், சென்னை-3 அனல் மின் நிலையத்தின் 800 மெகாவாட் அலகில் ஆண்டு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து கடந்த 19-ந்தேதி அதிகாலை முதல் அந்த அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 2 மாதங்களுக்கு பிறகு, அதாவது ஜனவரி 2-வது வாரத்தில் மீண்டும் மின் உற்பத்தியை தொடங்க மின் வாரியம் திட்டமிட்டுள்ளது. இதனால், இந்த காலகட்டத்தில் வட சென்னை-3 அலகில் இருந்து கிடைக்கும் 800 மெகாவாட் மின்சாரம் மட்டும் கிடைக்காது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'வட சென்னை-3 அலகில் இருந்து 800 மெகாவாட் மின்சாரம் 2 மாதங்களுக்கு கிடைக்காது என்பதால், அதே அளவுக்கு மின் பற்றாக்குறை ஏற்படும் என்று கூற முடியாது. பிற மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் வெளிமாநில மின் கொள்முதல் உள்ளிட்ட மாற்று வழிகள் மூலம் மின் தேவையை ஈடுகட்ட முடியும். பராமரிப்பு பணிகள் 2027 ஜனவரி மாதத்துக்குள் முடிவடைந்து மீண்டும் முழு திறனில் மின் உற்பத்தியை தொடங்கும்' என்றனர்.