ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய 8,141 பேருக்கு அபராதம்

குமரி மாவட்டத்தில் கடந்த மாதத்தில் இருச்சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 8,141 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கூறினார்.
ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய 8,141 பேருக்கு அபராதம்
Published on

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கடந்த மாதத்தில் இருச்சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 8,141 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கூறினார்.

ஆய்வுக்கூட்டம்

குமரி மாவட்ட சாலைப்பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஆய்வுக்கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் பேசியபோது கூறியதாவது:-

நாகர்கோவில் மாநகராட்சியில் நெருக்கடி பகுதிகளான வடசேரி, கார்மல் மேல்நிலைப்பள்ளி எதிர்புறம், புன்னைநகர், பால் பண்ணை சந்திப்பு ஆகிய இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படா வண்ணம் பஸ் நிறுத்தம் அமைப்பதற்கு இட ஆய்வு செய்து பணிகளை முடிவு செய்ய வேண்டும்.

வேகத்தடை

நெடுஞ்சாலைகளில் அதிக விபத்து ஏற்படும் இடங்களில் போதிய முன்னெச்சரிக்கை பலகைகள், வேகத்தடை அமைக்க வேண்டும். இருசக்கர வாகனங்களை போட்டிப் போட்டு ஓட்டுவது, அதிவேகமாக செல்வது போன்ற செயல்களில் ஈடுபடும் வாகன ஓட்டுனர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொண்டு அபராதம் விதிக்க வேண்டும்.

மாவட்டத்தில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். முக்கியமான சாலைகளில் தெரு விளக்குகள் இல்லாத காரணத்தினால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே இதை கருத்தில்கொண்டு முக்கியமான சாலைகளில் தெருவிளக்கு அமைக்க வேண்டும். நெடுஞ்சாலை ஓரங்களிலுள்ள மரங்களில் ஒளிரும் வண்ண பூச்சுகள் பூச வேண்டும். சாலை ஓரங்களிலுள்ள மின்விளக்குகள் மற்றும் மின்தடத்தில் படர்ந்துள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துதல் அவசியம்.

8,141 பேர் மீது வழக்கு

கடந்த மாதத்தில் இருச்சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 8,141 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் இருச்சக்கர வாகனத்தில் செல்லும்போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். 4 சக்கர வாகனத்தில் செல்லும்போது சீட்பெல்ட் போட்டு பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை நிலமெடுப்பு) ரேவதி, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் கோட்டாட்சியர் சேது ராமலிங்கம், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) இலக்குவன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) சுப்பையா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சாந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாஸ்கரன், உசூர் மேலாளர் (குற்றவியல்) சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com