உத்தரகாண்ட் மாநிலத்தில் 82 போலி சாமியார்கள் கைது


உத்தரகாண்ட் மாநிலத்தில் 82 போலி சாமியார்கள் கைது
x

துறவிகள் வேடத்தில் திரிந்து பக்தர்களையும், பொது மக்களையும் ஏமாற்றிய பலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

டேராடூன்,

உத்தரகாண்ட் அரசு தொடங்கிய 'ஆபரேஷன் காலனேமி' திட்டத்தின் ஒரு பகுதியாக, மக்களை ஏமாற்றுவதற்காக சாதுக்கள் மற்றும் துறவிகள் போல வேடமிட்டு 34 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சமீபத்திய கைதுடன், டேராடூனில் இந்த நடவடிக்கையின் கீழ் மொத்தம் 82 போலி சாமியார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக உத்தரகாண்ட் மாநிலத்தில் மதத்தின் போர்வையில் மக்களின் பொது நம்பிக்கையை சுரண்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி அறிவுறுத்தினார். இதையடுத்து கடந்த வியாழக்கிழமை முதல் அங்கு போலி சாமியார்களை கண்டுபிடிக்க 'ஆபரேஷன் காலனேமி' என்ற தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் சாதுக்கள் மற்றும் துறவிகள் வேடத்தில் திரிந்து பக்தர்களையும், பொது மக்களையும் ஏமாற்றிய பலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் மட்டும் 34 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களையும் சேர்த்து இந்த தேடுதல் வேட்டையில் இதுவரை 82 போலி சாமியார்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது, பக்தர்கள் புனித பயணங்களான சார்தாம் யாத்திரை மற்றும் கன்வர் யாத்திரை செல்லும் காலம் என்பதால் போலி சாமியார்களின் நடமாட்டம் அதிகரித்து இருப்பதாகவும், அதற்கு எதிராக இந்த ஆபரேஷன் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது.

1 More update

Next Story