தக்காளி வியாபாரி வீட்டில் 82½ பவுன் நகைகள், ரூ.2½ லட்சம் கொள்ளை

புதுக்கோட்டையில் தக்காளி வியாபாரி வீட்டில் 82½ பவுன் நகைகள், ரூ.2½ லட்சம் கொள்ளை போனது. மோப்ப நாய் கண்டுபிடிக்காமல் இருக்க மிளகாய் பொடியை மர்ம ஆசாமிகள் தூவி சென்றனர்.
தக்காளி வியாபாரி வீட்டில் 82½ பவுன் நகைகள், ரூ.2½ லட்சம் கொள்ளை
Published on

தக்காளி வியாபாரி

புதுக்கோட்டை போஸ் நகரை சேர்ந்த முருகேசனின் மனைவி ராஜலட்சுமி. இவர் புதுக்கோட்டை கீழ 3-ம் வீதியில் பெருமாள் கோவில் மார்க்கெட்டில் தக்காளி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் செந்தில்குமார் (வயது 35). இவரும் தனது தாயுடன் சேர்ந்து தக்காளி வியாபாரத்தை கவனித்து வருகிறார். செந்தில்குமாரின் மனைவி அனு. இவரும் கணவர் மற்றும் மாமியாருக்கு வியாபாரத்தில் உதவியாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு வியாபாரத்திற்கு ராஜலட்சுமி, அவரது மகன், மருமகள் ஆகியோர் சென்றனர். செந்தில்குமாரின் மகன் வெற்றிவேல் பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு திரும்பி வந்தான். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் ஒவ்வொரு அறையிலும் வைத்திருந்த 3 பீரோக்களும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.

82 பவுன் நகைகள் கொள்ளை

இது குறித்து வெற்றிவேல் உடனடியாக தனது தந்தைக்கு தகவல் தெரிவித்தான். அவர் தனது தாய் மற்றும் மனைவியோடு வீட்டிற்கு விரைந்து வந்தார். பீரோக்களில் இருந்த நகைகள் மற்றும் பணம் கொள்ளைப்போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து கணேஷ்நகர் போலீசாருக்கு செந்தில்குமார் தகவல் தெரிவித்தார். இதையடுத்து டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு ராகவி, இன்ஸ்பெக்டர்கள் குருநாதன் (டவுன்), முகமது ஜாபர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். வீட்டில் பீரோக்களில் இருந்த 82 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் கொள்ளை போனதாக போலீசாரிடம் செந்தில்குமார் தெரிவித்தார். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் தங்களது கைவரிசையை காட்டி தப்பிச்சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும் வீட்டிற்குள் தடயங்கள் எதுவும் சிக்காமல் இருக்கவும், மோப்ப நாய் கண்டுபிடிக்காமல் இருக்கவும் ஆங்காங்கே மிளகாய் பொடியை மர்ம ஆசாமிகள் தூவிச்சென்றிருந்ததும் தெரியவந்தது.

போலீசார் விசாரணை

வீட்டில் கொள்ளைப்போன நகைகள் விவரங்கள் பற்றி செந்தில்குமார், அவரது மனைவி அனு, தாய் ராஜலட்சுமி ஆகியோரிடம் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் உள்ளதா? என பார்வையிட்டனர். மர்ம ஆசாமிகள் பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு பின்பக்கமாக தப்பிச்சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தக்காளி மொத்த வியாபாரி வீட்டில் நகைகள், பணம் கொள்ளைப்போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com