மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 836 இடங்களை நிரப்ப வேண்டும் - மாணிக்கம் தாகூர்

மத்திய சுகாதாரத்துறை உடனடியாகத் தலையிட்டு கூடுதல் சிறப்பு கலந்தாய்வு நடத்த வேண்டும்.
மாணிக்கம் தாகூர்
Published on: 

சென்னை,

நாடு முழுவதும் 836 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ள நிலையில், கூடுதல் சிறப்புக் கலந்தாய்வு நடத்தி அவற்றை நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது: -

836 எம்பிபிஎஸ் இடங்கள்

நாடு முழுவதும் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தகுதி பெற்றும், தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் வானளாவிய கல்விக் கட்டணக் கொள்ளையால் இறுதிக்கட்ட 'Stray Round' கலந்தாய்விலும் 836 எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்பப்படாமல் காலியாகக் கிடக்கின்றன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 14 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மட்டும் 824 இடங்கள் காலியாக விடப்பட்டுள்ளன.

ஆண்டுக்கு ரூ.23 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை கட்டணம் நிர்ணயித்து, ஒட்டுமொத்தப் படிப்பிற்கு ரூ.1.5 கோடி வரை செலவாகும் நிலையை உருவாக்கி மருத்துவக் கல்வியை முற்றிலும் வணிகமயமாக்கியுள்ளனர். கட்டணம் கட்ட முடியாத காரணத்தால் அதிக மதிப்பெண் எடுத்த ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பத்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டு, குறைந்த மதிப்பெண் எடுத்த வசதி படைத்தவர்களுக்கு இடங்கள் செல்லும் சமூக அநீதி அரங்கேறியுள்ளது. காலியாக உள்ள இந்த 836 இடங்களும் சுயநிதித் தகுதிப் பிரிவு இடங்களே தவிர, என்.ஆர்.ஐ அல்லது சிறுபான்மை இடங்கள் அல்ல.

மருத்துவக் கல்லூரி

மோடி - அமித் ஷா தலைமையிலான ​மத்திய பாஜக அரசு, சாமானிய மாணவர்களின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல், அதிக கட்டணம் வசூலிக்கும் கல்வி மாபியாக்களுக்குத் துணைபோவதிலேயே முழுக் கவனம் செலுத்துகிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளைக்கு எந்தவித உச்சவரம்பும் நிர்ணயிக்காமல் வேடிக்கை பார்க்கும் மத்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

​மத்திய சுகாதாரத்துறை உடனடியாகத் தலையிட்டு கூடுதல் சிறப்பு கலந்தாய்வு நடத்த வேண்டும்; கட்டணத்தை முறைப்படுத்தி முறைசாரா முறையில் வீணாகும் இந்த மருத்துவ இடங்களை உரிய தகுதியுடைய ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்து மாணவர்களுக்கு உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

X

Daily Thanthi
www.dailythanthi.com