தமிழகத்தில் "மியூல் வங்கி கணக்கு" வைத்திருந்த 837 சைபர் குற்றவாளிகள் கைது

சைபர் கிரைம் பிரிவின் கட்டணமில்லா உதவி எண்ணான 1930-ஐ தொடர்பு கொள்ளவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உங்கள் புகாரைப் பதிவு செய்யவும்.
தமிழகத்தில் "மியூல் வங்கி கணக்கு" வைத்திருந்த 837 சைபர் குற்றவாளிகள் கைது
மகேஷ் குமார் அகர்வால்
Published on

சென்னை,

தமிழகத்தில் "மியூல் வங்கி கணக்கு" வைத்திருந்த 837 சைபர் குற்றவாளிகள் கைது. இது தொடர்பாக, காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

மியூல் வங்கி கணக்கு

மாநிலம் முழுவதும் "மியூல் வங்கி கணக்கு" வைத்திருப்பவர்களுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் சைபர் குற்ற வலையமைப்பை முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு காவல்துறையின் இணையவழி குற்ற பிரிவு சார்பில் 06.08.2026 மற்றும் 07.08.2026 ஆகிய இரண்டு நாட்களில் 48 மணி நேர "மாநிலம் முழுவதும் மியூல் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை" மேற்கொள்ளப்பட்டது. இந்நடவடிக்கையின் மூலம் மாநிலம் முழுவதும் 837 சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

சிறப்பு நடவடிக்கை

சைபர் மோசடிகள் மூலம் பெறப்படும் பணத்தை பெறுதல். பரிமாற்றம் செய்தல், பல்வேறு கணக்குகளுக்கு மாற்றுதல் மற்றும் பணமாக எடுத்தல் போன்ற செயல்களுக்கு வங்கி கணக்குகளை திறந்து கொடுப்பது. பயன்படுத்த அனுமதிப்பது. இயக்குவது மற்றும் இதற்கு உடந்தையாக இருப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பதே இச்சிறப்பு நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.

மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு

குறிப்பாக, பணம் அல்லது கமிஷன் பெற்றுக்கொண்டு வங்கி கணக்குகளை திறந்து கொடுத்தல் அல்லது பயன்படுத்த அனுமதித்தல் போன்ற செயல்களும் இந்நடவடிக்கையின் கீழ் கண்காணிக்கப்பட்டன. இச்சிறப்பு நடவடிக்கை, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் /படைத்தலைவர் மகேஷ் குமார் அகர்வால்,ஐ.பி.எஸ் உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.

நிகழ்நேர கண்காணிப்பு

சைபர் கிரைம் பிரிவினரால் முறையாக திட்டமிடப்பட்ட இந்நடவடிக்கை தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகரங்களிலும் ஒருங்கிணைந்த முறையில் மேற்கொள்ளப்பட்டது. இணையவழி குற்ற பிரிவு டி.ஜி.பி பாலா நாகதேவி, ஐ.பி.எஸ் இணையவழி குற்ற பிரிவு தலைமையகத்திலிருந்து இம்முழு நடவடிக்கையையும் மேற்பார்வையிட்டு, அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகரங்களுடன் சீரான ஒருங்கிணைப்பு மற்றும் நிகழ்நேர கண்காணிப்பை உறுதி செய்தார்.

பண பரிவர்த்தனை

இந்த பெரிய அளவிலான நடவடிக்கையானது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் தேசிய சைபர் குற்றப்புகார் இணையதளத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட குற்றவாளிகளின் சுயவிவர பகுப்பாய்வை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்டது. மேலும், சைபர் குற்ற வலையமைப்புகளின் நிதி பரிவர்த்தனைகள் தொடர்பான தரவுகளை பகுப்பாய்வு செய்து கண்டறியப்பட்ட பண பரிவர்த்தனை தடங்கள் மூலம் இச்சுயவிவரப்பகுப்பாய்வு மேலும் வலுப்படுத்தப்பட்டது.

சைபர் குற்றவாளிகள் மோசடி

சைபர் குற்றவாளிகள் மோசடி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் பெறப்படும் பணத்தை பெறுவதற்கும். பரிமாற்றம் செய்வதற்கும், பல்வேறு கணக்குகளுக்கு மாற்றி அதன் மூலத்தை மறைப்பதற்கும், பணமாக எடுத்துக்கொள்வதற்கும் பயன்படுத்தும் வங்கி கணக்குகள் "மியூல் வங்கி கணக்குகள்" எனப்படுகின்றன. தங்களது வங்கி கணக்குகளை இதுபோன்ற பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்த அனுமதிக்கும் நபர்கள், சட்டவிரோத பண பரிவர்த்தனைக்கு வழிவகுக்கும் வகையில் சைபர் குற்றவாளிகளுக்கு உதவுகின்றனர்.

837 சைபர் குற்றவாளிகளை கைது

இச்சிறப்பு நடவடிக்கையில், மொத்தம் 9,804 தேசிய இணையக் குற்றப் புகாரளிப்பு இணையதளம் புகார்களுடன் தொடர்புடைய, .545,27,27,809/-அளவிலான மோசடி பண பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய நபர்கள் குறிவைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டனர். இந்நடவடிக்கையின் போது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களும், அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்களின் மேற்பார்வையில் செயல்பட்டு. சைபர் குற்ற வழக்குகளில் பதிவு செய்யப்பட்ட 601 முதல் தகவல் அறிக்கைகளில் தொடர்புடைய 837 சைபர் குற்றவாளிகளை கைது செய்தனர். மேலும், சைபர் மோசடிகளுக்கு மியூல் வங்கி கணக்குகளை பயன்படுத்துதல் மற்றும் இயக்குதல் ஆகியவற்றை தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் 157 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

58 வங்கி கணக்கு

மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இச்சிறப்பு நடவடிக்கையின் போது, 204 செல்போன்கள். 185 சிம் கார்டுகள், 4 லேப்டாப்/டெஸ்க்டாப் கணினிகள். 1 பென் டிரைவ்/சேமிப்பு சாதனம், ரூ.1,02,000/- ரொக்கம், 114 வங்கி பாஸ்புக்குகள், 29 காசோலைப் புத்தகங்கள். 73 ஏ.டி.எம்/டெபிட் கார்டுகள், 1 கிரெடிட் கார்டு மற்றும் 2 இதர மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், தொடர் விசாரணை மற்றும் பகுப்பாய்விற்காக 155 செல்போன் எண்கள் மற்றும் 58 வங்கி கணக்கு விவரங்கள் கண்டறியப்பட்டன.

முக்கிய சாதனை

இந்த கைது நடவடிக்கைகள். நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ஒருங்கிணைக்கப்பட்ட சைபர் குற்ற வலையமைப்பை சீர்குலைத்து, அதன் செயல்பாடுகளை முறியடிப்பதில் ஒரு முக்கிய சாதனையாகும். சைபர் குற்றச் சூழலின் முக்கிய அங்கமான மியூல் வங்கி கணக்குகள் மூலம் சட்டவிரோத பணத்தைப் பெறுதல், பல்வேறு கணக்குகளுக்கு மாற்றுதல் மற்றும் பரிமாற்றம் செய்தல் ஆகியவற்றைத் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கை, இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய ஒருங்கிணைந்த நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

டிஜிட்டல் ஆதாரங்கள்

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட டிஜிட்டல் ஆதாரங்கள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு. குற்ற வலையமைப்பின் அடுத்தடுத்த அடுக்குகளில் செயல்படும் நபர்கள் மற்றும் நாடு முழுவதும் அவர்களுடன் தொடர்புடைய கூட்டாளிகளை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனுடன், இவ்வலையமைப்பில் தொடர்புடைய மேலும் பலரை கண்டறிந்து கைது செய்தல், மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்டெடுத்தல் மற்றும் நாடு முழுவதும் செயல்படும் சைபர் குற்ற உள்ள தொடர்புகளை கண்டறிதல் உள்ளிட்ட வலையமைப்புகளுடன் நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சட்ட நடவடிக்கை

கைது செய்யப்பட்ட நபர்கள் மீது சட்ட விதிகளின்படி கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், வங்கி கணக்குகளை பிறருக்கு வழங்குதல் அல்லது தவறாகப் பயன்படுத்த அனுமதித்தல் மூலம் சைபர் மோசடிகளுக்கு உதவும் நபர்களுக்கு இக்கைது நடவடிக்கைகள் ஒரு வலுவான எச்சரிக்கையாகவும் தடுப்பு நடவடிக்கையாகவும் அமையும்.

பாதுகாப்பை உறுதி செய்தல்

மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இந்த "மியூல் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை". சைபர் குற்றங்களுக்கு ஆதரவாக செயல்படும் நிதி உள்கட்டமைப்பை சீர்குலைத்தல். மாநிலத்தின் சைபர் குற்ற அமலாக்க நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துதல் மற்றும் இணையவழியில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றில் ஒரு முக்கியமான முன்னெடுப்பாகும்.

பொதுமக்களுக்கான அறிவுரை

கமிஷனுக்காக உங்கள் வங்கி கணக்கை ஒருபோதும் வழங்க வேண்டாம்:

கமிஷன் அல்லது பணப் பலனுக்காக உங்கள் வங்கி கணக்கு விவரங்களை மற்றவர்களுடன் பகிரவோ அல்லது உங்கள் கணக்கை பயன்படுத்த அனுமதிக்கவோ வேண்டாம்.

பண ஆதாயத்திற்காக வங்கி கணக்கு விவரங்களை வழங்க வேண்டாம்:

பணப் பலனுக்காக வங்கி கணக்கு விவரங்களைப் பகிர்வது அல்லது உங்கள் வங்கி கணக்கை பிறர் பயன்படுத்த அனுமதிப்பது, அது தெரிந்தோ தெரியாமலோ செய்யப்பட்டிருந்தாலும், சைபர் குற்றங்களுக்கு வழிவகுக்கக்கூடும் மற்றும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படலாம்.

ஆன்லைன் சூதாட்டம் மற்றும் பண பரிவர்த்தனை கொண்ட கேமிங் செயலிகளை பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்கவும்:

பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படும் ஆன்லைன் சூதாட்டம் அல்லது கேமிங் செயலிகளை பயன்படுத்தும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதுபோன்ற தளங்கள் மூலம் பணத்தை பெறுதல் அல்லது பரிமாற்றம் செய்தல் சைபர் குற்ற வலையமைப்புகளுடன் தொடர்புடையதாக இருக்கக்கூடும். இதனால் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு ஆளாகும் வாய்ப்பும் உள்ளது. எனவே. பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து, இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடவுச்சொல் பகிர வேண்டாம்:

ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP) அல்லது இதர முக்கியமான ரகசிய குறியீடுகளை யாரிடமும் பகிர வேண்டாம். தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கவும்: கடவுச்சொற்கள், (OTP), வங்கி கணக்கு விவரங்கள் உள்ளிட்ட முக்கியமான தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிர வேண்டாம்.

ஆன்லைன் கடன் வழங்குவதாக கூறும் அறிமுகமில்லாத நபர்களின் அழைப்புகளில் எச்சரிக்கையாக இருக்கவும்:

அறிமுகமில்லாத நபர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு கடன் வழங்குவதாகக் கூறி புதிய வங்கி கணக்கு/நடப்புக் கணக்கு (Current Account) தொடங்குமாறோ அல்லது இணைய வங்கி சேவை தொடர்பான ரகசிய விவரங்களைப் பகிருமாறோ கேட்டால், அதற்கு பதிலளிக்க வேண்டாம். இத்தகைய கோரிக்கைகள் உங்கள் வங்கி கணக்கு தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு வழிவகுக்கக்கூடும்.

பயன்பாட்டில் இல்லாத வங்கி கணக்குகளை மூடவும்:

பயன்பாட்டில் இல்லாத அல்லது நீண்ட காலமாக பரிவர்த்தனை மேற்கொள்ளப்படாத வங்கி கணக்குகளை உரிய வங்கி நடைமுறைகளின்படி மூடுமாறு கணக்கு வைத்திருப்பவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இத்தகைய செயலற்ற கணக்குகள் சைபர் குற்றவாளிகளால் குற்றச் செயல்களின் மூலம் பெறப்பட்ட பணத்தைப் பெறுவதற்கும் பரிமாற்றம் செய்வதற்கும் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

புகார் அளித்தல்

நீங்கள் சைபர் குற்றத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், சைபர் கிரைம் பிரிவின் கட்டணமில்லா உதவி எண்ணான 1930-ஐ தொடர்பு கொள்ளவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உங்கள் புகாரைப் பதிவு செய்யவும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com