விலை உயர்வை கட்டுப்படுத்த 840 டன் வெங்காயம் சென்னைக்கு வருகை..!

டெல்லிக்கு 500 டன் வெங்காயம் அனுப்பப்பட்ட நிலையில், தற்போது சென்னைக்கு 840 டன் அனுப்பப்பட உள்ளது.
விலை உயர்வை கட்டுப்படுத்த 840 டன் வெங்காயம் சென்னைக்கு வருகை..!
Published on

சென்னை,

வெங்காய விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, மத்திய அரசு தனது கையிருப்பில் இருந்து 840 டன் வெங்காயத்தை இன்று (ஆகஸ்ட் 29) சென்னைக்கு அனுப்ப தயாராகி வருகிறது. இதற்காக மராட்டிய மாநிலம் மன்மாட் பகுதியில் வெங்காயத்தை சரக்கு ரெயிலில் ஏற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

டெல்லிக்கு 500 டன் அனுப்பி வைப்பு

வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் சிறப்பு நடவடிக்கையாக, ‘கண்டா’ எனப்படும் சிறப்பு சரக்கு ரெயில்கள் மூலம் முக்கிய நகரங்களுக்கு வெங்காயத்தை மத்திய அரசு அனுப்பி வருகிறது. சமீபத்தில் டெல்லிக்கு 500 டன் வெங்காயம் அனுப்பப்பட்ட நிலையில், தற்போது சென்னைக்கு 840 டன் அனுப்பப்பட உள்ளது.

பருவமழை தாமதத்தால் விலை உயர்வு

பருவமழை தாமதம் மற்றும் சில பகுதிகளில் குறைந்த மழைப்பொழிவு காரணமாக வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு சந்தைகளில் வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லி, சென்னை, கேரளா, அசாம் உள்ளிட்ட பகுதிகளில் சில்லறை விலை உயர்ந்துள்ளது.

கிலோ ரூ.50 முதல் ரூ.65 வரை விற்பனை

பல நகரங்களில் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.50 முதல் ரூ.65 வரை விற்பனை செய்யப்படும் நிலையில், விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு கையிருப்பு வெங்காயத்தை சந்தைகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.

ரெயில் மட்டுமின்றி சாலை வழியாகவும் விநியோகம்

வெங்காயத்தை விரைவாக சந்தைகளுக்கு கொண்டு சேர்க்க ரெயில் போக்குவரத்துடன், சாலை வழி விநியோகத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களில் டெல்லி மற்றும் குவஹாத்திக்கு லாரிகள் மூலம் வெங்காயம் அனுப்பப்பட்டுள்ளன. மேலும், அதிக விலை நிலவும் பல்வேறு நகரங்களுக்கும் கையிருப்பு வெங்காயத்தை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

மொத்த விலையிலும் சரிவு தொடக்கம்

மத்திய அரசின் நடவடிக்கையின் தாக்கம் மராட்டிய மாநிலம் நாசிக் பகுதியில் உள்ள மொத்த வெங்காய சந்தைகளிலும் தெரியத் தொடங்கியுள்ளது. நாட்டின் மிகப்பெரிய வெங்காயச் சந்தைகளில் ஒன்றான லாசல்கான் ஏபிஎம்சியில், கடந்த நான்கு நாட்களில் சராசரி விலை சுமார் 10 சதவீதம் குறைந்துள்ளது.

குவிண்டாலுக்கு ரூ.4,250-ல் இருந்து ரூ.3,800 ஆக குறைவு

லாசல்கான் சந்தையில் குவிண்டாலுக்கு ரூ.4,250 ஆக இருந்த சராசரி வெங்காய விலை தற்போது ரூ.3,800 ஆக குறைந்துள்ளது. முக்கிய சந்தைகளுக்கு மத்திய அரசின் கையிருப்பில் இருந்து வெங்காயம் தொடர்ந்து விடுவிக்கப்படுவதே இந்த விலை சரிவுக்கு காரணம் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

விலை உயர்வை தடுக்க மத்திய அரசு தீவிரம்

சில்லறை சந்தையில் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில், கையிருப்பு வெங்காயத்தை அதிக விலை நிலவும் பகுதிகளுக்கு விரைந்து கொண்டு செல்ல மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ரெயில் மற்றும் சாலை போக்குவரத்து ஆகிய இரு வழிகளிலும் விநியோகத்தை ஒருங்கிணைத்து செயல்படுத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com