

கரூர்,
கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி மாவட்டங்களில் நடப்பாண்டில் ரேஷன் அரிசி, மானிய விலை உரம் போன்றவற்றை கடத்தி விற்பனை செய்ததாக 848 பேரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் அரசின் பொது வினியோக திட்டத்தின் கீழ் வினியோகிக்கப்படும் அரிசி, மண்எண்ணெய், கோதுமை, துவரம்பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானிய விலை உரம் (யூரியா) போன்றவற்றை மக்களிடம் இருந்து சிலர் குறைந்த விலை கொடுத்து வாங்கி பதுக்கி வைக்கிறார்கள். பின்னர் அவற்றை அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற இடங்களுக்கு கடத்திச்சென்று அங்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இதுபோல் மானிய விலையில் வழங்கப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர்களையும் பதுக்கி வைத்து வர்த்தக ரீதியாக பயன்படுத்தி வருகிறார்கள். இதனை தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் தொடர் ரோந்து மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
திருச்சி மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ் உத்தரவின்பேரில் திருச்சி சரக துணை போலீஸ் சூப்பிரண்டு வின்சென்ட் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் தலைமையிலான குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் தீவிர ரோந்து மேற்கொண்டும், சந்தேகப்படும் இடங்களிலும், ரகசிய தகவல்கள் அடிப்படையிலும் அதிரடி சோதனை மேற்கொண்டும் வருகிறார்கள்.
அதன்படி, திருச்சி மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை ரேஷன் அரிசி, மானிய விலை கியாஸ் சிலிண்டர்கள், மானிய விலை உரம் ஆகியவற்றை கடத்தியதாகவும், பதுக்கியதாகவும் மொத்தம் 313 வழக்குகளை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் பதிவு செய்துள்ளனர்.
மேலும் இந்த குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதாக 319 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து 115,695 டன் ரேஷன் அரிசி, மானிய விலை உரம் 14.175 டன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக 68 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதுடன், கியாஸ் சிலிண்டர்களை பதுக்கியதாக 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 177 கியாஸ் சிலிண்டர்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
அதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் 176 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 21.820 டன் ரேஷன் அரிசி மற்றும் மானிய விலை உரம், 18 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், கியாஸ் சிலிண்டர்களை பதுக்கியதாக 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12 கியாஸ் சிலிண்டர்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் 135 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக 4 இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 சரக்கு வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் 264 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 321 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 58.720 டன் ரேஷன் அரிசி, 38.115 டன் மானிய விலை உரம், 30 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதுடன், கியாஸ் சிலிண்டர்களை பதுக்கியதாக 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 364 கியாஸ் சிலிண்டர்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 302 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 5 பேர் கைது செய்து செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 35 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதில் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதாக திருச்சி மாவட்டத்தில் 4 பேரும், கரூர் மாவட்டத்தில் 2 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடப்பாண்டில் ரேஷன் அரிசி, மானிய விலை உரம் போன்றவற்றை கடத்தி விற்பனை செய்ததாக பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 848 பேரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.