நெல்லையில் சுதந்திர தின பாதுகாப்பு பணியில் 850 போலீஸ்

சுதந்திர தினத்தையொட்டி திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் வெடிகுண்டு தடுப்பு சிறப்பு பிரிவினர் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவின்படி, சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான முக்கிய பஜார்கள், பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், கடைவீதிகள் என அனைத்து இடங்களிலும் எவ்வித அசம்பாவிதமும் நடந்திடா வண்ணம் 850க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் வெடிகுண்டு தடுப்பு சிறப்பு பிரிவினர் மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். இது தவிர திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து தங்கும் விடுதிகளிலும் போலீசார் இரவு, பகலாக சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர். சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் காவல் துறைக்கு தெரிவிக்கும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாவட்டம் முழுவதும் சுற்றுக்காவல் ரோந்து வாகனங்கள் மூலம் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, முக்கியமான இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனைகளும், தணிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.






