

சென்னை,
சென்னையில் கடந்த 5 நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக, நகரின் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் சென்னை பெருநகர காவல் ஆயுதப்படை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அடங்கிய 13 காவல் மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் 12 காவல் மாவட்டங்களிலும் சட்டம், ஒழுங்கு காவல் குழுவினர் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. மழைநீர் சூழ்ந்துள்ள இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர பகுதிகளில் 87 தற்காலிக முகாம்களில் 1,844 ஆண்கள், 1,963 பெண்கள், 994 குழந்தைகள் உள்ளிட்ட 4,810 நபர்கள் உணவு வழங்கப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.