881 கவுரவ விரிவுரையாளர்கள் பணி: அடுத்த மாதம் 8-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்


881 கவுரவ விரிவுரையாளர்கள் பணி: அடுத்த மாதம் 8-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
x

881 கவுரவ விரிவுரையாளர்கள் பணிக்கு அடுத்த மாதம் 8-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஏழை-எளிய மாணவர்களின் உயர்கல்வித்தேவையினை பூர்த்திசெய்ய 15 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் உடனடியாக நிரந்தர ஆசிரியர்களை பணியமர்த்த இயலாத நிலையில், முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலுக்கிணங்க மாணவர்களுக்கான கல்வி கற்றலில் தொய்வு ஏற்படாமல் இருக்க ஏற்கனவே 574 இடங்களுக்கு தற்காலிக கவுரவ விரிவுரையாளர்கள் தேர்வு செய்ய விளம்பரம் வெளியிடப்பட்டது. அதில் 516 பேர் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, மேலும், 881 கவுரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக பணியமர்த்துவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 38 பாடப்பிரிவுகளில், 881 தற்காலிக கவுரவ விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதுகுறித்த முழு விவரங்கள் www.tngasa.org என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியுள்ளவர்கள் அடுத்த மாதம் (அக்டோபர்) 8-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். கடந்த ஜூலை 21-ந்தேதி அறிவிப்பின்படி, ஏற்கனவே கவுரவ விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் தற்போது விண்ணப்பிக்கும்போது, தங்களின் விண்ணப்ப எண்களை பதிவுசெய்து, விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்குபெறலாம். தமிழ்நாடு அரசின் நெறிமுறைகளைப் பின்பற்றியும், கல்வித்தகுதி மற்றும் நேர்முகத்தேர்வு மதிப்பீடுகளின் அடிப்படையிலும் கவுரவ விரிவுரையாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story