முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்: கவர்னர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மீதான ஊழல் புகாரில் தமிழக கவர்னர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்: கவர்னர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
Published on

சென்னை,

முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மீதான ஊழல் புகாரில் தமிழக கவர்னர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொதுசெயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

மாலை 5.15 மணிக்கு தொடங்கிய கூட்டம் மாலை 6.30 மணியளவில் நிறைவடைந்தது. இந்த கூட்டத்தில், திருச்சியில் அடுத்த மாதம் (பிப்ரவரி) நடைபெறும் தி.மு.க. மாநாடு குறித்தும், மு.க.ஸ்டாலினின் தேர்தல் பிரசார சுற்றுப்பயண திட்டம் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

* 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியின் அவலத்தை விளக்கிடும் வகையில், மாநிலம் முழுவதும் 21 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும், வார்டுகளிலும் மக்கள் கிராம சபை கூட்டங்களை நடத்தி, மக்களின் குறைகளை கேட்டறிந்துள்ள ஒரே இயக்கம், இந்திய துணை கண்டத்திலேயே தி.மு.க. மட்டும்தான் என்பதை இந்த கூட்டம் பெருமிதத்துடன் பதிவு செய்கிறது.

இந்த கூட்டங்கள் வாயிலாக அ.தி.மு.க. ஆட்சியின் அவலத்தை சுட்டிக்காட்டி ஒரு கோடியே 5 லட்சம் தமிழக மக்கள் அ.தி.மு.க.வை நிராகரித்துள்ளதை ஜனநாயகத்தின் முன்னேற்றத்தைக் காட்டும் பக்கங்களில் தனிமுத்திரை பதிக்கும் நிகழ்வாக இந்த கூட்டம் கருதுகிறது.

சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று, மக்களுக்கு பொறுப்புடன் தொண்டூழியம் செய்திடும் நல்லாட்சியை, திறமையானதும், வெளிப்படையானதும், ஊழலற்றுதுமான ஆட்சியை அமைத்திடவும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சராகிடவும் மாவட்ட செயலாளர்களின் இந்த கூட்டம் உறுதியேற்கிறது.

* இந்தியாவிலேயே ஊழலில் புரையோடிப் போன ஆட்சியை நடத்தி, தமிழகத்துக்கு மிகுந்த தலைகுனிவை ஏற்படுத்தியுள்ள முதல்-அமைச்சர் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வுக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர்களின் கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 22.12.2020 அன்று தமிழக கவர்னரை சந்தித்து, அவரிடம் முதல்-அமைச்சர் உள்ளிட்ட அவரது அமைச்சரவை சகாக்கள் மீது 97 பக்கங்கள் கொண்ட பல்வேறு புகார்கள் அடங்கிய பட்டியலை அளித்துள்ளதை இந்த கூட்டம் வரவேற்கிறது.

இந்த புகார்கள் மீது கவர்னர் இதுவரை நடவடிக்கை எடுக்காதது கவலையளிக்கிறது. எனவே கவர்னர் இந்த புகார்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள இந்த கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

* பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உள்ள முக்கிய குற்றவாளிகளை உடனடியாக சி.பி.ஐ. கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும். தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்.

* 3 வேளாண் சட்டங்களுக்கும் எதிராக சுப்ரீம்கோர்ட்டில் தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மூலம் வழக்கு தாக்கல் செய்து, தடை உத்தரவு பெற்றிருக்கும் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இந்த கூட்டம் பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறது. அதே வேளையில் 3 வேளாண் சட்டங்களையும் மத்திய பா.ஜ.க. அரசு நிபந்தனை இன்றி உடனே திரும்ப பெற வேண்டும்.

* மார்கழி மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசு உடனடியாக நிவாரணம் வழங்கிட வேண்டும். நிவர் மற்றும் புரெவி புயல்கள் பாதிப்புக்கு வழங்கப்படுவதாக அறிவித்துள்ள ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் என்பதை ரூ.30 ஆயிரம் என உயர்த்தி வழங்கிட வேண்டும்.

* பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை குறித்து, கவர்னரே இன்னும் 3 நாட்களில் முடிவெடுப்பார் என்று மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் சுப்ரீம்கோர்ட்டில் தெரிவித்திருக்கிறார். எனவே இதற்கு மேலும் காலதாமதம் செய்யாமல், அவர்களை உடனடியாக விடுதலை செய்து தமிழக கவர்னர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

----------

செய்தி எண்: 19 36பாயிண்ட் படம் உண்டு.

--

---

புட்நோட்1: சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்ற போது எடுத்த படம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com