மாவட்டத்தில் 88.49 சதவீதம் பேர் தேர்ச்சி

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், கடலூர் மாவட்டத்தில் 88.49 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்
மாவட்டத்தில் 88.49 சதவீதம் பேர் தேர்ச்சி
Published on

கடலூர்

தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகும் என்று பள்ளி கல்வித் துறை சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று காலை 10 மணி அளவில் தேர்வு முடிவுகள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. இதனால் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்வதில் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் தங்களது செல்போனில் தேர்வு முடிவுகளை அறிந்து கொண்டனர்.

ஆசிரியர்கள் உதவியுடன்

சிலர் தாங்கள் தேர்வு எழுதிய பள்ளிகளுக்கு வந்து, இணையதளத்தில் தேர்வு முடிவுகளை ஆசிரியர்கள் உதவியுடன் அறிந்து கொண்டனர். செல்போன்களிலும் பார்த்தனர்.

பெரும்பாலான மாணவர்களுக்கு தங்களின் செல்போன் எண்களுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் எளிதில் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவை அறிந்து கொண்டனர். தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உற்சாக மிகுதியில் தங்கள் நண்பர்களுடன் துள்ளி குதித்தனர். ஒருவருக்கொருவர் இனிப்பு கொடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.

88.49 சதவீதம் பேர் தேர்ச்சி

கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை 246 அரசு பள்ளிகள், 46 அரசு உதவி பெறும் பள்ளிகள், 153 மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகள் உள்பட 445 பள்ளிகளில் இருந்து 17 ஆயிரத்து 892 மாணவர்கள், 16 ஆயிரத்து 292 மாணவிகள் என மொத்தம் 34 ஆயிரத்து 184 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 15 ஆயிரத்து 160 மாணவர்களும், 15 ஆயிரத்து 88 மாணவிகள் என 30 ஆயிரத்து 248 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 84.73 சதவீதமும், மாணவிகள் 92.61 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர். ஒட்டு மொத்தமாக மாவட்டத்தில் 88.49 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com