திருச்சி சிறப்பு முகாமில் இலங்கையை சேர்ந்த 9 பேர் அதிரடி கைது

திருச்சி சிறப்பு முகாமில் இலங்கையை சேர்ந்த 9 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களுக்கு போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி சிறப்பு முகாமில் இலங்கையை சேர்ந்த 9 பேர் அதிரடி கைது
Published on

திருச்சி சிறப்பு முகாமில் இலங்கையை சேர்ந்த 9 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களுக்கு போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி சிறப்பு முகாம்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் வெளிநாடுகளை சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் வழக்கில் இருந்து ஜாமீனில் வந்தாலும், விடுதலையானாலும் அவர்களுடைய நாட்டிற்கு அனுப்பும் வரை சிறப்பு முகாமிலேயே தங்க வைக்கப்படுவார்கள். தற்போது சிறப்பு முகாமில் இலங்கை, வங்காளதேசம், நைஜீரியா, ருவாண்டா, பல்கேரியா, தெற்கு சூடான், பாகிஸ்தான், இங்கிலாந்து, சீனா உள்பட பல நாடுகளை சேர்ந்த 152 பேர் உள்ளனர்.

அதிரடி சோதனை

கடந்த ஜூலை மாதம் 20-ந் தேதி கேரளாவை சேர்ந்த தேசிய புலனாய்வு முகமை டி.ஐ.ஜி. காளிராஜ் மகேஷ்குமார், சூப்பிரண்டு தர்மராஜ் தலைமையில் அதிகாரிகள் 15 பேர் துணை ராணுவப்படையினர் சுமார் 70 பேருடன் திருச்சி சிறப்பு முகாமில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அதிகாலை 5 மணி முதல் மாலை வரை நடந்த இந்த சோதனையில் 100-க்கும் மேற்பட்ட செல்போன்கள், மடிக்கணினி, தங்க நகைகள், பென்டிரைவ், சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டன.

அப்போது சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த இலங்கையை சேர்ந்த குணசேகரன் உள்பட 12 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கேரளா மாநிலம் விழிஞ்சியம் அரபிக்கடல் பகுதியில் இலங்கையை சேர்ந்த 6 பேர் வந்த மீன்பிடி படகில் இந்திய கடலோர காவல்படையினர் மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர்.

போதை பொருள் கடத்தல் கும்பலுக்கு தொடர்பு

அப்போது அந்த படகில் இருந்து 300 கிலோ ஹெராயின் போதைப்பொருள், 5 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், 1,000 துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இலங்கையை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களுக்கும், பாகிஸ்தான் மற்றும் இலங்கையை சேர்ந்த போதை பொருள் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது. மேலும், அந்த படகில் இருந்து சில ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். அந்த ஆவணங்கள் தடைசெய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்துக்கு தொடர்புடையதாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.

செல்போன்கள் பறிமுதல்

இந்த வழக்கின் தொடர்ச்சியாக தான் திருச்சி சிறப்பு முகாமிற்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த ஜூலை மாதம் வந்து குணசேகரன் உள்பட 12 பேரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

மேலும், இவர்களுக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. இதற்கிடையே என்.ஐ.ஏ. சோதனை நடத்திவிட்டு சென்ற மறுநாளே கடந்த ஜூலை 21-ந் தேதி அமலாக்கத்துறையினரும் சிறப்பு முகாமிற்கு வந்து சோதனை நடத்திவிட்டு சென்றனர்.

அதன்பிறகு மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில், சிறப்பு முகாமுக்குள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்திய போலீசார் அங்கு ஏராளமான செல்போன்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை மீண்டும் ஒப்படைக்கக்கோரி சிறப்பு முகாமில் உள்ளவர்கள் தொடர் போராட்டமும் நடத்தினார்கள்.

9 பேர் கைது

இந்தநிலையில் கேரள என்.ஐ.ஏ. சூப்பிரண்டு தர்மராஜ், துணை சூப்பிரண்டு செந்தில் தலைமையிலான 8 அதிகாரிகள் நேற்று காலை சிறப்பு முகாமிற்கு வந்து திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இதில் ஏற்கனவே அவர்கள் விசாரித்த இலங்கையை சேர்ந்த குணசேகரன், புஷ்பராஜ், கோட்டைகாமணி, தனுக்காரேஷன், கென்னடி பெர்னான்டோ, முகமதுஅனீஸ், திலீபன், சுரங்கா, லதியா ஆகிய 9 பேரை தனித்தனியாக அழைத்து துருவி, துருவி விசாரித்தனர்.

பின்னர் 9 பேரையும் கைது செய்வதற்காக அனுமதி கேட்டு மாவட்ட கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து கடிதம் வழங்கினர். கலெக்டர் பிரதீப்குமார் 9 பேர் மீது போடப்பட்ட வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையை கேட்டார்.

இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் இது தொடர்பான ஆவணங்களை கலெக்டரிடம் காண்பித்துவிட்டு 9 பேரையும் கைது செய்து திருச்சியில் இருந்து சென்னைக்கு அழைத்து சென்றனர்.

மேலும் அவர்களுக்கு போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா? எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

திருச்சி சிறப்பு முகாமில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தியதையொட்டி அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com