

சென்னை,
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், கட்சி பணியில் ஈடுபட்டிருந்த போது மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு, விபத்தில் சிக்கிய கட்சி தொண்டருக்கு சிகிச்சைக்கான நிதிஉதவி மற்றும் உயர் கல்வி பெறும் கட்சியினரின் பிள்ளைகளுக்கான நிதிஉதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று மதியம் நடைபெற்றது.
இதில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டு 10 லட்சத்து 90 ஆயிரத்து 10 ரூபாய்க்கான வரைவோலைகளை பயனாளிகளுக்கு வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் கட்சி பணியாற்றியபோது உயிர் இழந்த வடசென்னை வடக்கு(மேற்கு) மாவட்டத்தை சேர்ந்த எல்.கங்காதரமின் மனைவி ஜி.மல்லிகா, திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் பகுதியை சேர்ந்த எஸ்.மணியின் மனைவி எம்.முத்துலட்சுமி, சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியை பகுதியை சேர்ந்த பி.ராஜவேலின் தாயார் பி.பாக்கியம் ஆகியோருக்கு தலா 2 லட்சம் ரூபாய்க்கான வரைவோலைகள் வழங்கப்பட்டன.
மேலும், மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்த சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியை சேர்ந்த கட்சி தொண்டர் எம்.மணிகண்டனின் மருத்துவ சிகிச்சைக்காக அவரது தாயார் எம்.மாதம்மாளிடம் 50 ஆயிரம் ரூபாய்க்கான வரைவோலை வழங்கப்பட்டது.
இது தவிர, கல்வி நிதிஉதவியாக மருத்துவம் படித்து வரும் தூத்துக்குடி மாவட்டம், மந்தித்தோப்பு அருகே உள்ள கணேஷ்நகரை சேர்ந்த வி.மாதவனுக்கு ரூ.75 ஆயிரத்துக்கான வரைவோலையும், இயன்முறை மருத்துவம் படித்து வரும் சென்னை புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கே.கலைவாணிக்கு ரூ.55 ஆயிரத்துக்கான வரைவோலையும், பிலிப்பைன்சில் மருத்துவம் படித்து வரும் சென்னை நெசப்பாக்கம் அருகே உள்ள மஞ்சு கார்டனை சேர்ந்த சி.வார்த்திகாவுக்கு ரூ.2 லட்சத்துக்கான வரைவோலையும், பி.சி.ஏ. படித்து வரும் சென்னை சைதாப்பேட்டை அருகே உள்ள வெங்கடாபுரத்தை சேர்ந்த ஆர்.ராஜ்குமாருக்கு 61 ஆயிரத்து 140 ரூபாய்க்கான வரைவோலையும், பி.பி.ஏ. படித்து வரும் சென்னை மயிலாப்பூர் அருகே உள்ள நொச்சி நகரை சேர்ந்த ஐ.பிரதாப் இஸ்ரவேலுக்கு 48 ஆயிரத்து 870 ரூபாய்க்கான வரைவேலையும் வழங்கப்பட்டது.
இந்த நிதிஉதவி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.