விநாயகர் சிலைகள் ஊர்வலம்
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி தேனி மாவட்டத்தில் 816 இடங்களில் நேற்று முன்தினம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்பட்டன. இதையடுத்து பெரியகுளத்தில் நேற்று முன்தினம் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வராகநதியில் கரைக்கப்பட்டன.
தேனி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அரண்மனைப்புதூர் முல்லைப்பெரியாற்றில் கரைக்கப்பட்டன. இந்து முன்னணி சார்பிலும், இந்து எழுச்சி முன்னணி சார்பிலும் தேனியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடத்தப்பட்டது.
பலத்த பாதுகாப்பு
இந்து எழுச்சி முன்னணி சார்பில் பொம்மையகவுண்டன்பட்டி சாலைப் பிள்ளையார் கோவில் முன்பு இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் தொடங்கியது. அதில், 100-க்கும் மேற்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. ஊர்வலத்துக்கு நிறுவன தலைவர் பொன்.ரவி தலைமை தாங்கினார்.
ஊர்வலத்தில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் தலைமையில் 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பலத்த பாதுகாப்புடன் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. அல்லிநகரம், நேரு சிலை சிக்னல், மதுரை சாலை, பங்களாமேடு வழியாக அரண்மனைப்புதூர் முல்லைப்பெரியாறு வரை ஊர்வலம் நடந்தது. பின்னர் ஆற்றில் சிலைகள் கரைக்கப்பட்டன. ஊர்வலம் தொடங்குவதற்கு முன்பு சிலைகள் வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் ஒலிபெருக்கிகள் கட்டக்கூடாது என்றும், கட்டி வைத்திருந்த ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்தனார். ஆனால் விழா ஏற்பாட்டாளர்கள் ஒலிபெருக்கிகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஒலிபெருக்கிகள் கட்டிய நிலையில் வாகனங்கள் ஊர்வலத்தில் பங்கேற்றன. இது அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்து முன்னணி
மாலையில் இந்து முன்னணி சார்பில் பொம்மையகவுண்டன்பட்டி சாலை பிள்ளையார் கோவில் முன்பு இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலத்துக்கு மாவட்ட பொதுச்செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். இதில், 50-க்கும் மேற்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அரண்மனைப்புதூர் முல்லைப்பெரியாற்றில் கரைக்கப்பட்டன.
கம்பம் நகரில் வைக்கப்பட்டிருந்த சுமார் 57-க்கும் மேற்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. கம்பம் அரசமரத்தில் தொடங்கிய ஊர்வலம் பழைய பஸ் நிலையம், மாரியம்மன் கோவில், வரதராஜபுரம், வ.உ.சி. திடல், அரசு மருத்துவமனை, நாட்டுக்கல், கம்பம்மெட்டு ரோடு, தங்க விநாயகர் கோவில் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று சுருளிப்பட்டி முல்லைப்பெரியாற்றில் விநாயகர் சிலைகளை கரைத்தனர்.
ஆற்றில் கரைப்பு
கம்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், லாவண்யா தலைமையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதேபோல் இந்து எழுச்சி முன்னணி சார்பில், நகரில் 15 இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டன. பின்னர் நேற்று காலை அந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு காமயகவுண்டன்பட்டி முல்லைப்பெரியாற்றில் கரைக்கப்பட்டது.ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் சுமார் 65 இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் நேற்று விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. ஆண்டிப்பட்டி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. சுமார் 3 மணி நேரம் நடந்த ஊர்வலத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து விநாயகர் சிலைகள் வைகை அணையில் கரைக்கப்பட்டன.
இதேபோல், கடமலைக்குண்டு, போடி, கோம்பை, தேவாரம், உத்தமபாளையம், கூடலூர் ஆகிய இடங்களிலும் விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.