9 டிரோன் மூலம் கண்காணிப்பு: மெரினாவில் காணும் பொங்கல் அன்று 1,200 போலீசார் பாதுகாப்பு - போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பேட்டி

17-ந் தேதி காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரையில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
9 டிரோன் மூலம் கண்காணிப்பு: மெரினாவில் காணும் பொங்கல் அன்று 1,200 போலீசார் பாதுகாப்பு - போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பேட்டி
Published on

சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதியில் போலீஸ் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டது. கடற்கரை மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் 28 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. மெரினா கடற்கரை மணற்பரப்பில் 4 இடங்களில் சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் போலீஸ் உதவி மையம் நிறுவப்பட்டது.

இவற்றின் பயன்பாட்டை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர், மெரினா கடற்கரையில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு ஒளிரும் ஜாக்கெட்டுகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, இணை கமிஷனர்கள் சிபி சக்ரவர்த்தி, திஷா மிட்டல், துணை கமிஷனர்கள் பி.மகேந்திரன், ரஜத் சதுர்வேதி, ரோகித்நாதன் ராஜகோபால், தேஷ்முக் சேகர் சஞ்சய், உதவி கமிஷனர் பாஸ்கர் உள்பட போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின்னர், போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மெரினா கடற்கரை மணற்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள சோலார் உதவி மையம் பொதுமக்கள் இரவு நேரங்களிலும் எளிதில் அடையாளம் கண்டு அவசர உதவியை பெற முடியும். பண்டிகை காலங்களில் கூட்டம் அதிகம் இருக்கும் நேரத்தில், பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும். அவசர தேவைக்கும் பயன் உள்ளதாக இருக்கும்.

கூட்ட நெரிசலில் மாயமாகும் குழந்தைகள், முதியோர்கள் பற்றி உடனடியாக புகார்கள் தெரிவித்து, அவர்களை கண்டுப்பிடிப்பதற்கு, இந்த போலீஸ் உதவி மையங்கள் முக்கிய பங்கு வகிக்கும்.

காணும் பொங்கலை முன்னிட்டு (17-ந் தேதி) மெரினா கடற்கரையில் மட்டும் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். 9 நவீன டிரோன்கள் வாயிலாகவும் கண்காணிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ஆயுதப்படை போலீசார் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கலந்துகொண்டார். மேலும் அவர், கொச்சின் ஹவுஸ் போலீஸ் குடியிருப்பு, பரங்கிமலை ஆயுதப்படை மைதானம் ஆகிய இடங்களில் நடைபெற்ற பொங்கல் விழாவிலும் பங்கேற்று சிறப்பித்தார்.

கிராமிய மனம் கமழும் வகையில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com