தமிழகத்தில் 9 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலி - பள்ளிக் கல்வித்துறை பரபரப்பு அறிக்கை!

4,853 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாலும், கூடுதலாக 4,519 ஆசிரியர்கள் தேவை என்பதாலும், எல்.கே.ஜி, யு.கே.ஜி ஆசிரியர்கள் மீண்டும் தொடக்கப் பள்ளிகளுக்கே மாற்றப்பட்டனர்.
தமிழகத்தில் 9 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலி - பள்ளிக் கல்வித்துறை பரபரப்பு அறிக்கை!
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் 2 ஆயிரத்து 381 அங்கன்வாடி மையங்களை அரசு பள்ளிகளுடன் இணைத்து கடந்த 2019-20-ம் கல்வியாண்டு முதல் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கு சேரும் குழந்தைகளுக்கு பாடம் நடத்த தொடக்கக்கல்வி இயக்ககம் சார்பில் ஆசிரியர்களும் பணிக்கு நியமிக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது நடப்பு கல்வியாண்டில் கல்வித்துறை சார்பில் 2 ஆயிரத்து 381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படாது என்று கூறப்பட்டது. இதுகுறித்து கல்வித்துறையிடம் கேட்டபோது, அங்கன்வாடி மையங்கள் வழக்கம்போல் செயல்படும் என்றும், அதற்கான முழு பொறுப்பு சமூக நலத்துறை வசம் ஒப்படைக்கப்பட இருக்கிறது என்றும் தெரிவித்தனர்.

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை தொடக்க கல்வி இயக்குநர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது,

2013-14க்கு பின், ஆசிரியர்கள் புதிதாக நியமிக்காததால், ஓய்வுபெறும் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன. அரசு தொடக்கப்பள்ளிகளில் அதிகளவில் மாணவர் சேர்க்கை உள்ளதாலும், 1 முதல் 5-ம் வகுப்பு வரை கவனம் செலுத்தி கற்றல் இடைவெளியைக் குறைக்க வேண்டும் என்பதால் ஆசிரியர்கள் இடைநிலை வகுப்புகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே 4,853 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாலும், கூடுதலாக 4,519 ஆசிரியர்கள் தேவை என்பதாலும், அரசு தொடக்கப்பள்ளிகளில் பணியாற்ற மொத்தம் 9,000 ஆசிரியர்கள் தேவை என்பதால் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகளை எடுத்து வந்த ஆசிரியர்கள் மீண்டும் தொடக்கப் பள்ளிகளுக்கே மாற்றப்பட்டனர்.

அவர்களுக்கு மழலையர் வகுப்புகளில் உள்ள குழந்தைகளை கையாள்வதில் சிக்கல், புரிதலின்மையே நீடித்தது. மேலும், எண்ணும் எழுத்தும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தவும், தொடக்கப்பள்ளிகளில் மாணவர் தரத்தை உயர்த்தவுமே ஆசிரியர்கள் மாற்றப்பட்டனர்.

இந்த ஆண்டு முதல் அங்கன்வாடிகளில் ஏற்கனவே இருந்த குழந்தைகளுக்கு முந்தைய நடைமுறையை பின்பற்றி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் அங்கன்வாடி உதவியாளர்கள் மூலம் தற்காலிகமாக கற்றல் செயல்பாட்டை மேற்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தொடக்கக் கல்வி இயக்குனரகம் விளக்கமளித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com