பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறக்க 95% பெற்றோர்கள் ஆதரவு - பள்ளிக்கல்வித்துறை தகவல்

பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறப்பது குறித்த பெற்றோர்களின் கருத்துகளை அரசிடம் பள்ளிக்கல்வித்துறை தாக்கல் செய்துள்ளது.
பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறக்க 95% பெற்றோர்கள் ஆதரவு - பள்ளிக்கல்வித்துறை தகவல்
Published on

சென்னை,

கொரோனா நோய்த் தொற்றால் பள்ளிகள் கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் 3-வது வாரத்தில் இருந்து மூடப்பட்டு இருக்கின்றன. நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி, வீடியோ பகிர்வு மூலம் தொடங்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் 2020-21-ம் கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகளை நடத்தலாமா? என்பது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

அதற்கு முன்னோட்டமாக பொங்கல் விடுமுறைக்கு பிறகு 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளை திறக்கலாமா? வேண்டாமா? என்று அந்தந்த மாணவர்களின் பெற்றோரிடம் கருத்துகள் கேட்க அரசு முடிவு செய்து அதற்கான அறிவிப்பையும் கடந்த 4-ந் தேதி வெளியிட்டது. அதன்படி, 8-ந் தேதிக்குள் (நாளை) கருத்துகளை கேட்டு சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட பள்ளிகள் 10, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோரை அழைத்து அவர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 5,200-க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் உயர்நிலை பள்ளிகள், 7,400-க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகளில் நேற்று முதல் கருத்துகள் கேட்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

நேற்றும், இன்றும் பெறப்பட்ட கருத்துக்கள் அந்தந்த பள்ளிகள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதன்படி பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறக்க 95% பெற்றோர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜனவரி 18ல் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த கருத்துக்களின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com